முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவையொட்டி, அதிமுகவின் பொதுச்செயலாளராக அவரின் தோழி சசிகலா பொறுப்பேற்றார். இதனைத்தொடர்ந்து, எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்க பன்னீசெல்வம் ராஜினாமா செய்தார்.
சசிகலா முதல்வராக பொறுப்பேற்பதற்கு அதிமுக தொண்டர்களிடையேயும், மக்களிடையேயும் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்தவரும், சட்டமன்ற சபாநாயகராக இருந்தவருமான பி.எச்.பாண்டியன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில், ஜெயலலிதாவின் சிகிச்சை, இறப்பில் பல்வேறு சந்தேகம் உள்ளதாகவும், சசிகலா முதல்வராக தேர்ந்தெடுத்து குறித்தும் பல்வேறு சந்தேகத்தை பி.எச்.பாண்டியன் எழுப்பினார்.
மேலும், ஜெயலலிதாவிடம் தேர்தலுக்கு கைரேகை வாங்கியதுபோல், அவரின் சொத்துக்களை அபகரிப்பதற்கும் கைரேகையை பதிவுசெய்திருக்கலாம் என்று குற்றம் சாட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ஜெயலலிதாவுடன் நடந்த ஒரு சட்ட ஆலோசனைக் கூட்டத்தில், அவரே, என்னுடைய சொத்துக்கள் எல்லாம், நகைகள் உள்பட மக்களுக்கே போய்சேர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். அப்போது என்னை பார்த்து ‘நோட் இட்’ என்று சொல்லி என்னை சாட்சியாக முன்னிறுத்திவிட்டு சென்றுள்ளார் என பி.எச். பாண்டியன்தெரிவித்தார்.
இந்த பேட்டியால், சசிகலா முதல்வராக பதவியேற்க அதிமுக தொண்டர்களிடையேயும், தமிழக மக்களிடையே பல்வேறு எதிர்ப்புகளை வலுப்படுத்த வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.