ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், முக்தி தரும் 12 தலங்களுள், 11-வது தலமாகவும் போற்றப்படுவது நாச்சியார் கோவில் திருத்தலம். இங்கு வஞ்சுளவல்லி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. பெரும்பாலும் பெருமாள் கோவில்களில், பெருமாளுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆனால் இங்கு பெண் தெய்வமான தாயாருக்கே முன்னுரிமை என்பதை காட்டும் வகையில், ஊரின் பெயரே ‘நாச்சியார் கோவில்’ எனப்பெயர் பெற்று விளங்குகிறது. முற்காலத்தில் இந்த ஊர் ‘திருநறையூர்’ என்று அழைக்கப்பட்டது.
கோச்செங்கணான் என்ற சோழமன்னன், சிவபெருமானுக்கு 70 கோவில்கள் கட்டினான். ஆனால் விஷ்ணுவுக்காக கட்டியது திருநறையூரில் உள்ள நம்பிக்கோவில் மட்டுமே. இதை திருமங்கையாழ்வார் பாடிய, ‘செம்பியன் கோச்செங்கணான் சேர்ந்த கோவில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே’ என்ற பாடல் மூலம் அறியலாம். கோவில் கோபுரம் ஐந்து அடுக்கு கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதுஒரு மாடக்கோவிலாகும். மூலவர் சன்னிதியை அடைய 21 படிகள் ஏறிச் செல்ல வேண்டும்.
ராஜகோபுர வாசலில் நின்று பார்த்தால், கருவறையில் உள்ள எம்பெருமான் ஒரு மலைமேல் எழுந்தருளியிருப்பதாக தோன்றும். மூலவர் சீனிவாசன் நான்கு திருக்கரங்களுடன் காட்சி தருகிறார். இதில் வரம் தரும் முத்திரையுடன் வலது திருக்கையும், திருத்தொடையில் அமர்த்திய இடது திருக்கையும், சங்கு சக்கரம் ஏந்திய இருகைகளுடனும் விளங்குகிறார்.
நாச்சியார் திருநாமம் வஞ்சுளவல்லி. இவர் பெருமாளின் வலப்பக்கத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். தமது வலது திருக்கையில் வரதமுத்திரையுடன் இடது திருக்கையைத் தொங்கவிட்ட நிலையில் தாயார் காட்சி தருகிறார். மூலவர் பெருமாளுடன் மூலஸ்தானத்திலேயே நின்ற திருக்கோலத்துடன் தாயார் காட்சியளிப்பதை வேறு எந்த தலத்திலும் பார்க்கமுடியாது.
தல வரலாறு :
சுகந்தவனம் என்றழைக்கப்பட்ட இந்த ஊரில், முன்பு மேதாவி என்ற மகரிஷி இருந்தார். இவர் தனக்கு திருமகளே மகளாகவும், சீனிவாசனே மருமகனாகவும் வரவேண்டும் என்று விரும்பினார். இதற்காக மணிமுத்தாற்றின் தென்கரையில் அமர்ந்து தவம் செய்தார். வழக்கம் போல் ஒருநாள் நதியில் நீராடிக் கொண்டிருந்தார் மேதாவி மகரிஷி. அப்போது அவரது கையில் சக்கரபாணி சுவாமி சிலை கிடைத்தது. அப்போது வானில் இருந்து ஒரு அசரீரி ஒலித்தது.
‘முனிவரே! இந்த விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், நினைத்த எண்ணம் நிறைவேறும்’ என்றது அந்த குரல். முனிவரும், தமது எண்ணம் கைகூடும் காலம் வந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்தார். பின்னர் சக்கரபாணி நரசிம்ம பெருமாளை, பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். இந்த இடத்தில் வந்து தங்க விரும்பிய மகாலட்சுமி, அங்குள்ள வகுள மரத்தடியில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த மேதாவி மகரிஷியின் முன்பு சிறுமியாக தோன்றினாள். தன்னை அவர் பொறுப்பில் வளர்த்து வருமாறு வேண்டினாள். மனமகிழ்ந்த மகரிஷியும் அவ்வாறே ஆகட்டுமென ஆசிகூறி, சிறுமிக்கு வகுளாதேவிநாச்சியார் எனப் பெயர் சூட்டி வளர்த்து வந்தார்.
வகுளாதேவிக்கு திருமண வயது வந்ததும், பெருமாள் கருடன் மீதேறி தாயாரைத்தேடி வந்தார். மேதாவி மகரிஷியை கண்டு, தனக்கு நாச்சியாரை மணமுடித்துத் தரும்படி வேண்டினார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த மகரிஷி, பெருமாளிடம் சில வரங்களைக் கேட்டு பெற்றார். ‘இத்தலத்தில் தங்களை வந்து தரிசிக்கும் பக்தர்களுக்கு இப்பிறவியிலும், மறுபிறவியிலும் அனைத்து நலங்களும் கிடைக்க வேண்டும். எனது புதல்வியான வஞ்சுளவல்லிக்கு இத்தலத்தில் எல்லாவற்றிலும் முதன்மையும், சுதந்திரமும் கொடுக்க வேண்டும். அவள் திருப் பெயராலேயே இத்தலம் அழைக்கப்பட வேண்டும். தங்களை சரண் புகுந்தவர்களுக்கு தப்பாமல் முக்தி அளிக்க வேண்டும்’ என்று வரங்களைக் கேட்டார்.
பெருமாளும் முனிவர் கேட்ட வரங்களைத் தந்தருளினார். பின்னர் கருடாழ்வார் முன்னிலையில் மகாவிஷ்ணு, வஞ்சுளவல்லி திருமணம் நடைபெற்றது. தாயார் பெயராலேயே இத்தலம் நாச்சியார் கோவில் எனப்பெயர் பெற்றது.
கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளியதை அடுத்து விசேஷ கல் கருடன் மூலவராகவும், உற்சவராகவும் இங்கு காட்சி அளிக்கிறார். கருவறைக்குக் கீழே மகா மண்டபத்தில் வடபுறம் தெற்கு நோக்கியுள்ள சன்னிதியில் பட்சிராஜன், பெரியதிருவடி என்று அழைக்கப்படும் கருடன் எழுந்தருளியுள்ளார். கருடன் சாளக்கிராமம், கருங்கல் திருமேனியுடன் இருப்பதால், பெருமாளுக்கு பூஜை ஆனதும் இவருக்கும் ஆறுகால வழிபாடு நடைபெறும்.
ஆண்டுதோறும் மார்கழி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழாக்களில் நான்காம் நாள் பெருமாள், கருடன் மேல் வீதி உலா வருவார். இந்த விழாவின் போது ஒரு அதிசயம் நடக்கிறது. அதாவது கல்கருட உற்சவரை சன்னிதியில் இருந்து தூக்கும்போது நான்கு பேர்தான் தூக்குவார்கள். வீதி உலா நடைபெறும் போது, 4 என்பது 8, 16, 32, 64 மற்றும் 128 என்று தூக்குவோரின் எண்ணிக்கை உயரும். வீதி உலா முடிந்து கோவிலுக்குள் வந்து, உற்சவரை சன்னிதியில் வைக்கும் போது தொடக்கத்தில் இருந்த நான்கு பேரே கொண்டு வந்து வைப்பார்கள்.
இந்த வைபவத்திற்கு தலவரலாறு ரீதியாக ஒரு விளக்கமும் அளிக்கிறார்கள். அதாவது, பெருமாள் மேதாவி மகரிஷிக்கு ஒரு வரம் அளித்தார். அனைத்திலும் தாயார் நாச்சியாரே முதலிடம் பெறுவார் என்பதே அந்த வரம். தாயார் இந்த சன்னிதியில் அன்ன வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார். பெருமாள் வீற்றிருக்கும் கருடனோ பலமும், அதே சமயம் வேகமாக செல்லும் திறனும் கொண்டவர். எனவே வீதி உலா செல்லும் போது நாச்சியாரின் அன்ன வாகனத்தை முந்திச் செல்லாமல் இருக்க, கருடன் தன்னுடைய எடையை அதிகரிக்கிறாராம். இதனால் பறக்க முடியாத நிலையில் பின் தங்கிச் செல்வதாக ஐதீகம்.
இத்தலத்தில் கருடனுக்குத் தனிசிறப்பை போல், சக்கரத்தாழ்வாருக்கும் தனிசிறப்பு உண்டு. கோவிலின் நான்காவது சுற்றில் மடப்பள்ளிக்கு எதிரில் உள்ள தனிசன்னிதியில் இவர் அருள்பாலிக்கிறார். இந்த சுதர்சன ஆழ்வார் சிலை வடிவத்தின் பின் பக்கம், நரசிம்மப்பெருமாள் தரிசனம் தருகிறார்.
இந்த சக்கரத்தாழ்வார்தான், மணிமுத்தாற்றில் நீராடிய போது, மேதாவி முனிவரின் கையில் கிடைத்தது. அசரீரி வாக்கு உரைத்தபடி அம்முனிவர் இந்தச் சக்கரத்தாழ்வாரை பிரதிஷ்டை செய்து பூஜை செய்துவந்தார். 48 நாட்கள் இந்தப் பெருமாளை சுற்றிவந்து வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும். எல்லா விதமான மன நோய்களும் விலகும். இந்தக் கோவில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந் திருக்கும்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் நாச்சியார்கோவில் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து பஸ்வசதி உண்டு.