இந்திய மண்ணில் அசத்தினால் சிறந்த அணி அந்தஸ்தை பெறலாம்: ஸ்டீவன் சுமித்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. 2004-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெற்றது கிடையாது. தற்போதைய டெஸ்ட் தொடரும் அந்த அணிக்கு யுத்தம் போன்று தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இதையொட்டி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய மண்ணில் சிறப்பாக செயல்பட்டால், அது மாபெரும் பாராட்டை பெற்றுத்தரும். இந்த சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடித்தால், உலகின் தலைச்சிறந்த அணிகளில் ஒன்று என்ற அந்தஸ்தை பெறலாம். அது மட்டுமின்றி இங்கு வாகை சூடும் போது அடுத்து வரும் ஆஷஸ் தொடரை கூடுதல் நம்பிக்கையோடு எதிர்கொள்ள முடியும். இந்திய தொடரை வெல்ல முடியாமல் சமனில் முடித்தால் கூட அது மிகப்பெரிய விஷயமே.

இந்தியாவில் எங்களால் சாதிக்க முடியாது என்று நிறைய விமர்சனங்கள் வருகின்றன. உண்மையை சொல்ல வேண்டும் என்றால், போட்டியின் முடிவு குறித்து நாங்கள் சிந்திக்கவில்லை. சரியான பாதையில் பயணிக்க வேண்டியது தான் இப்போதைய தேவையாகும். கடுமையான சூழலில் திறம்பட சமாளிப்பதற்கான வழிமுறையை கண்டறிந்து செயல்பட வேண்டும். இதை செய்து விட்டால், வெற்றி தானாக கிட்டும்.

பொதுவாக நான் சுழற்பந்து வீச்சில் நன்றாக ஆடக்கூடியவன். சுழலுக்கு எதிராக எந்த மாதிரி ஆட வேண்டும், எவை நமக்கு ஒத்து வராது என்பது புரிந்து, அதற்கு ஏற்ப திட்டம் வகுத்துள்ளேன். இலங்கையில் விளையாடிய போது ஓரளவு கற்றுக்கொண்டேன். என்னை பொறுத்தவரை சதம் அடித்தால் மட்டும் போதாது. பெரிய ஸ்கோர் குவிக்க வேண்டும். அது தான் வெற்றிக்கு உதவும்.

இவ்வாறு ஸ்டீவன் சுமித் கூறினார்.

ஆஸ்திரேலிய புதுமுக சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்வெப்சன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒரு லெக்-ஸ்பின்னராக களத்தில் ஆக்ரோஷமாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்துவதை ஆவலோடு எதிர்நோக்கி உள்ளேன். எனக்கு எதிராக யார் பேட் செய்கிறார்கள் என்பது பற்றி கவலைப்படமாட்டேன். எங்கள் அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்த வேண்டியது முக்கியம். இது தான் எங்களுக்கு உள்ள மிகப்பெரிய சவாலாகும்’ என்றார்.