தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை உள்ளது: நடிகர் சூர்யா பேட்டி

துபாய் உள்பட அனைத்து இடங்களிலும் நடிகர் சூர்யா நடித்த ‘சிங்கம்-3’ திரைப்படம் நேற்று வெளியானது. துபாயில் ஹயாத் ரீஜென்சியில் உள்ள ஒரு தியேட்டரில் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்ப்பதற்காக நடிகர் சூர்யா நேற்று துபாய் வந்தார்.

முதல் காட்சியாக இரவு 7 மணி அளவில் திரையிடப்பட்ட ‘சிங்கம்-3’ படத்தை ரசிகர்களோடு அமர்ந்து பார்த்தார். முன்னதாக நடிகர் சூர்யா, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிங்கம், சிங்கம்-2 படங்கள் வெற்றிகரமாக அமைந்தன. அதேபோல் ‘சிங்கம்-3’ படத்துக்கு தொடர்ச்சியாக சரியான கதை களம் அமைந்ததால் அதே குழுவினரோடு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெற்றிகரமாக வெளியாகி உள்ளது. இதில் உள்ள சண்டை காட்சிகள் அனைவரையும் கவரும்.

இயக்குனர் ஹரி சிறு வயதில் போலீசில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விருப்பப்பட்டார். அந்த ஆசை நிறைவேறாமல் போனதால் அதை தான் இயக்கும் திரைப்படங்களில் காட்டி வருகிறார்.

தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு விவகாரத்தில் போலீசாரை தவறாக சித்தரித்துள்ளனர். ஒரு சிலர் அதுபோல் இருக்கலாம். ஆனால் அனைவரும் பாராட்டும் வகையில் சீருடையை மாற்றி கொண்டு போராட்டத்தில் அமர்ந்த போலீசாரையும் நாம் கண்டுள்ளோம்.

இப்போதுள்ள தமிழக அரசியல் விவகாரங்களை நானும் உங்களை போல் பார்த்துக்கொண்டு வருகிறேன். தமிழ்நாட்டில் நல்லாட்சி அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

நான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளை சார்பில் குழு அமைக்கப்பட்டு கருவேல மரங்களை அகற்றி சிறந்த சுற்றுச்சூழலை தமிழகத்தில் ஏற்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறேன். இது விறகாக பலருக்கு பயன்படும் என்பதால் இதில் வேலை வாய்ப்பும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.

இவ்வாறு நடிகர் சூர்யா கூறினார்.