கணபதியின் பேரருளை பெற்றுத் தரும் வெள்ளிக்கிழமை விரதம்

இந்த விரதத்தை வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை தொடங்கி ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அனுஷ்டிக்கவேண்டும். விரதத்தைத் தொடங்கும்போதே எத்தனை வெள்ளிக்கிழமைகள் விரதம் இருக்கவேண்டும் என்பதை சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.

அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு தூய ஆடைகளை உடுத்திக்கொண்டு விரதத்தை தொடங்கவேண்டும். பூஜையறையில் கலச ஸ்தாபனம் செய்து, அந்தக் கலசத்தில் விநாயகரை எழுந்தருளச் செய்யவேண்டும். பின்னர் கரும்பு, விளாம்பழம், சர்க்கரை, பலாப்பழம் ஆகியவற்றை நைவேத்தியம் செய்து வணங்கவேண்டும்.

அன்று முழுவதும் எதுவும் உண்ணக்கூடாது. இரவு படுக்கப்போவதற்கு முன்பு சிறிதளவு பழமும் பாலும் உண்ணலாம் வெள்ளிக்கிழமை விரதம் முடியும் நாளில் மகேஸ்வர பூஜை செய்து, அடியார்களுடன் சேர்ந்து உண்ண வேண்டும். இந்த விரதத்தை அனுஷ்டித்து அத்திரி மகரிஷி சந்திரனையும் துர்வாசரையும் பிள்ளைகளாகப் பெற்றார். குபேரன் சங்க- பதும நிதிகளைப் பெற்றார்.