முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது காணப்படுகின்ற ஊழல், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் நிரூபிக்கப்பட்டால் அதற்கடுத்த நடவடிக்கையாக அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகின்றது.
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பு கங்காராம விகாரையின் வருடாந்த பெரஹரா நிகழ்வு நேற்று முன்தினம் தினம் ஆரம்பமானது.
அதன் இரண்டாம் நாள் ஊர்வலத்துக்கு சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கங்காராமய விகாரையின் தலைமை பிக்குவான கலபொட ஞானேஸ்வர தேரரை சந்தித்த அமைச்சர் ஆசிபெற்றார்.
சுற்றுலாத்துறை மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சின் சார்பாக குறித்த விகாரைக்கு அமைச்சர் ஜோன் அமரதுங்க நன்கொடையாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையையும் வழங்கிவைத்தார்.
அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியவுடன் கைது செய்யப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றமை தொடர்பாக அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் வினவியமைக்கு பதிலளித்த அமைச்சர் இதுதொடர்பான தகவல்கள் எனக்குத் தெரியாது.
எனினும் குற்றம் செய்திருந்தால், மோசடிகள் மற்றும் ஊழல் செய்திருந்தால் அவற்றுக்கு எதிராக ஆதாரங்கள் காணப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார். மாறாக அவரைக் கைது செய்ய முடியாது. அதனை மீறியும் கைது செய்யப்பட்டால் அது ஜனநாயகத்திற்கு விரோதமாகும் என்றார்.
இதேவேளை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது சபைக்கு தலைமைதாங்கிய உறுப்பினர் எழுந்திருந்தபோது அக்கிராசனம் சரிந்து விழுந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது.
இந்த சம்பவமானது அரசாங்கத்திற்கு கெட்டசகுணம் ஆரம்பித்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் கிண்டலாக சபையில் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் ஜோன் அமரதுங்கவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது,
கதிரை சரிந்தது பெரிய விடயமாகுமா? எமது வீடுகளிலும் கதிரைகள் சரிந்த சம்பவங்கள் இடம்பெற்றன.
இப்படியென்றால் கணவன், மனைவியிடையே பிரச்சினை ஏற்படவேண்டும்தானே. அது பொய்க்கதை. முட்டாள்தனமான விடயங்களை கைவிட வேண்டுமென நான் அறிவுரை வழங்குகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.