போராட்டம் வெடிக்கும் : மஹிந்த எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்ந்தும் பிற்போடப்பட்டு வருகின்ற நிலையில், அதனை எதிர்த்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தங்காலை கார்ல்டன் இல்லத்தில் நேற்று  இடம்பெற்ற முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

உள்ளூராட்சி மன்றங்கள் சீர்குலைந்துள்ளன. குறிப்பாக டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதால், அனேகமான இடங்களில் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு சொந்தமான வாகனங்கள் சேதமடைந்துள்ளதுடன், அதற்கான நிதி வேறு தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

அதுமாத்திரமின்றி மக்களின் வாழ்க்கைச் செலவு தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு உயர்வடைந்துள்ளது. கூடிய விலை கொடுத்தேனும் அரிசி கொள்வனவு செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளது.