மட்டக்களப்பில் வடகிழக்கிணை இணைத்து அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்னும் பெயருடன் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் இந்த புதிய அரசியல் கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மத்திய வீதியில் உள்ள போக்கஸ் விடுதியில் நடைபெற்றது.
மட்டக்களப்பில் இயங்கிவரும் நாம் திராவிடர் கட்சியும் இதன்போது தமது ஆதரவினை புதிய கட்சியின் உருவாக்கத்திற்கு வழங்கியுள்ளது.
முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் தலைமையில் நடைபெற்ற இதன் அங்குரார்ப்பண நிகழ்வின்போது கட்சியின் பொதுச்செயலாளராக மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் அமைப்பின் தலைவர் வி.கமலதாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியினை பதிவுசெய்யும் நடவடிக்கைகள் விரைவாக மேற்கொள்ளவும் மட்டக்களப்பில் கட்சி அலுவலகம் திறப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வட,கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகளுக்கான வாழ்வாதார திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் கணவனை இழந்துள்ள பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டினை மேற்கொள்ளும் வகையிலும் செயற்படவுள்ள இதேவேளை வடகிழக்கில் அரசியல் செயற்பாடுகளிலும் ஈடுபடவுள்ளதாகவும் முன்னாள் மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், இன்றைய அரசியல் சூழல் தமிழ் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு கட்சி தேவைப்படுகின்றது.
தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் பல குழப்பம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நான் வெளியே வருவதற்கான நேரம் தற்போது நெருங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.ஆயுதபோராட்டம் என்பது நாங்கள் தொடங்கியது இல்லை. முதன் முதலாக ஜே.வி.பியினர்தான் ஆரம்பித்தனர்.
நான் அமைச்சராக இருந்த போது ஒரு நிலம் பறிபோக வில்லை. ஆனால் நல்லாட்சி வந்த பின்னர் நிலம் பறிபோகிறது. நிலத்தை காப்பாற்றக்கூடிய உரிமை இங்கு யாரிடமும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.