நாட்டை பிரிப்பது என்றால் எங்கள் உயிர் பிரிந்த பின்னரே அது நடக்கும்: தேரர் எச்சரிக்கை

சமஷ்டி என்ற போர்வையில் நாட்டைப் பிரிக்கும் முயற்சி தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டால் இலங்கையின் நிலைமை எதிர்காலத்தில் பயங்கரமாகிவிடும் எனவும் அவ்வாறு நாட்டைப் பிரிப்பதாயின் தங்களது உயிர் பிரிந்த பின்னரே நிகழும் என்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் சிலர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு வெலிக்கடை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை சந்திக்க சில பௌத்த பிக்குகள் இன்றைய தினம் முற்பகல் வெலிக்கடை சிறைக்கு விஜயம் செய்தனர்.

இந்த விஜயத்தைத் தொடர்ந்து குறித்த பிக்குகள் குழுவுக்கு தலைமைதாங்கிய ருக்மலே தம்மகீர்த்தி தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

சமஷ்டி தீர்வென்பது நாட்டைப் பிளவுபடுத்தாது என்று அவர்கள் கூறுகின்றனர். எனினும் இந்த நாட்டைப் பிரிக்கவே முயற்சிக்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம்.

இந்த நாட்டைப் பிரிப்பதற்கே இந்த நாட்டிலுள்ள தலைவர்களும் முயற்சிக்கின்றனர். இருப்பினும் நாட்டிலுள்ள அனைவரும் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

இரகசியமாக இந்த முயற்சியை மேற்கொண்டாலும் அரசியலில் இல்லாத அனைத்து மகாநாயகர்களும் விழித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அனைத்து மகா நாயகர்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்திற்கு பாடம்புகட்டுவோம்.

எமது உயிரைத் தியாகம் செய்த பின்னரே இந்நாட்டைப் பிரிக்க முடியும். மகாநாயக்கர்களும், இளைய பிக்குகளும் பின்வாங்க மாட்டார்கள். கோரிக்கைகளை முன்வைக்கும் இளைஞர்களை கைது செய்கின்றனர். அவர்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் நடத்தப்படுகிறது.

அரசாங்கம் அவர்களின் கோரிக்கைகளை நிராகரிக்கின்றது. இந்த நிலை தொடர்ந்து சென்றால் மிகவும் பயங்கரமான சூழ்நிலையே இந்த நாட்டில் ஏற்படும். என்றார்.

வடக்கு கிழக்கு ஒன்றிணைந்து செயற்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. இந்த நாட்டில் வாழும் சிங்களம், முஸ்லிம் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து வாழ வேண்டும்.

எனினும் இந்த நாட்டைப் பிரிக்கும் செயற்பாட்டிற்கு எதிராகவே நாங்கள் அணி திரண்டு எதிர்க்கின்றோம் என்றார்.