தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரவன்ச!

அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட, தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதை அனைவரும் மறந்து விட்டனர்.

ராஜபக்சர்கள் மற்றும் கூட்டு எதிர்க்கட்சியினர் உட்பட விமல் வீரவன்சவை புறக்கணிப்பதோடு, அவருக்காக எவ்வித குரலும் கொடுக்காமல் எவ்வித உதவியும் செய்யாமல் இருப்பதே இதற்கான காரணமாகும்.

இது தொடர்பில் ஆராய்ந்த போது, 2020ஆம் ஆண்டினை இலக்கு வைத்து வீரவன்சவினால் முன்னெடுக்கப்படும் அரசியல் சூழலை வீழ்ச்சியடைய செய்வதற்காக ராஜபக்சர்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கம்மன்பில, டிரான் அலஸ், பசில் ராஜபக்ச ஆகியோர் சிறைச்சாலை சென்ற போது, ராஜபக்சர்கள் உட்பட கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து அவர்களை காப்பாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொண்டனர். எனினும் விமல் வீரவன்சவை வெளியில் கொண்டு வரும் நடவடிக்கையில் இவர்கள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டப்படுகிறது. இது தொடர்பில் விமலுக்கு நெருக்கமானவர்கள் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை, தற்போது அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ள கம்மன்பில, வீரவன்சவுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிறையிலிருந்து வெளி வருவதற்கான முயற்சிகளை வீரவன்ச தனிப்பட்ட ரீதியில் மேற்கொண்டு வருகிறார். இதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் உதவியை நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனக்கு எதிராக உள்ள கடவுச்சீட்டு மோசடி, வாகன மோசடி மற்றும் தங்கள் வீட்டில் உயிரிழந்த இளைஞர் தொடர்பிலான விசாரணைகளை மூடி மறைப்பதே இதன் நோக்கமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.