வங்காளதேசத்துக்கு எதிரான ஐதராபாத் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார்.
4 டெஸ்ட் தொடர்களில் அவர் தொடர்ச்சியாக இரட்டை சதம் அடித்தார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இங்கிலாந்து டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதத்தை பதிவு செய்து இருந்தார்.
4 தொடர்களில் தொடர்ச்சியாக 4 இரட்டை சதம் அடித்த உலகின் ஒரே வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். இதற்கு முன்பு பிராட்மேன், ராகுல் டிராவிட் 3 டெஸ்ட் தொடர்களில் 3 இரட்டை சதம் அடித்திருந்தனர்.
இந்த சாதனை குறித்து விராட் கோலி கூறியதாவது:-
தற்போது நான் டெஸ்ட் போட்டியில் கூடுதல் கவனம் செலுத்துகிறேன். நான் எப்போதுமே நீண்ட நேரம் நிலைத்து விளையாடவே விரும்புகிறேன்.
எனது முதல் 7 அல்லது 8 சதம் 120 ரன்னுக்கு மேல் தாண்டியது இல்லை. இதற்கு சாதாரணமான பேஸ்ட்மேனாக இருக்கும் போது இந்த நிலை மெத்தனம் நிலை காரணமாக இருக்கலாம்.
நான் தற்போது கேப்டனாக இருப்பதால் பொறுப்புடன் ஆடுகிறேன். நீண்ட இன்னிங்சில் விளையாடுகிறேன். இதற்கு கேப்டன் பதவி மற்றும் நல்ல உடல் தகுதியே முக்கிய காரணம்.
அணியின் கேப்டனாக இருப்பதால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது.
எனது உடல் தகுதியில் நான் மிகவும் கூடுதல் கவனத்துடன் இருக்கிறேன். சதம் அடித்ததும் திருப்தி அடைந்து விடவில்லை. மிகப்பெரிய ஸ்கோர் எடுக்க வேண்டும் என்ற மனநிலை இருக்கிறது. இதனால் ரன்களை குவித்து சிறப்பாக ஆட முடிகிறது.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.