முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. எங்களின் ஆதரவு எப்பவும் ஓ.பன்னீர் செல்வத்திற்குத்தான் என்று பெண் தொண்டர்கள் கூறி வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலை முழுவதும் மனிதத்தலைவளாக காட்சியளிக்கிறது. அமைச்சர்கள் பங்களாக்கள் எல்லாம் பூட்டியிருக்க முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் குடியிருக்கும் தென்பெண்ணை பங்களா முன்பு மட்டும் மக்கள் நிரம்பி வழிகிறது.
கடந்த புதன்கிழமையில் இருந்தே முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் வீடு உள்ள பகுதிகளில் தொண்டர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. சாலைகளின் ஓரங்களில் வாகனங்கள் நிரம்பியிருக்கின்றன. ஆட்டோக்களிலும், பேருந்துகள், வேன்களில் இருந்து வந்த தொண்டர்கள் ஆவலுடன் காத்திருந்து முதல்வரை பார்த்து செல்கின்றனர்.
குவிந்த கூட்டம்
கிரீன் ஸ் சாலையில் காலை முதலே தொண்டர்கள் கூட்டம் குவிந்திருக்க வரிசையாக தொண்டர்களை காவல்துறையினர் அனுப்பிக்கொண்டிருந்தனர். ஓபிஎஸ் வீட்டில் ஒருபக்கம் உணவு ரெடியாக இருந்தது. வந்த தொண்டர்கள் சிலர் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். பெண்கள் கூட்டம் குவிந்திருந்தது. ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவதாக தேடித் தேடி பேட்டி தட்டிக்கொண்டிருந்தனர்.
பெண்களுக்கு சசிகலாவின் மீதான கோபம் போகவில்லை. காரணம் ஜெயலலிதாவின் மரணம் பற்றிய மர்மம் விலகாமல் இருப்பதுதான். இந்த முதல்வரை அடையாளம் காட்டியது அம்மாதான், எனவே நாங்கள் இவரைத்தான் முதல்வராக ஏற்றுக்கொள்வோம் என்கின்றனர். சசிகலா தொகுதிப்பக்கம் வந்தாலே நாங்கள் அடித்து விரட்டுவோம் என்று பெண்கள் ஆவேசமாக பேட்டி கொடுத்தனர்.
அவர் ஏன் பதவி விலகணும்
ஓபிஎஸ் ஐயா ஏன் பதவி விலகணும்? அவர் நல்லாத்தானே ஆட்சி நடத்துறார். அவரை ராஜினாமா செய்யச் சொல்லிட்டு இந்த அம்மா போய் அங்க உட்கார்ந்து என்ன செய்யப் போகுது என்று கேட்கிறார் வேலூரில் இருந்து வந்திருக்கும் விஜயா. நாங்க எல்லாரும் வெளியூர்ல இருந்து வந்திருக்கோம். எங்க ஆதரவு எப்பவும் ஓபிஎஸ் ஐயாவுக்குத்தான் என்கிறார்கள் பெண் தொண்டர்கள்.
எங்க முதல்வர் ஓபிஎஸ்
10.30 மணிக்கு செய்தியாளர்களையும், தொண்டர்களையும் சந்திக்க தயாரானார் முதல்வர். அவரை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். சால்வைகள் குவிந்தன. நேரில் வந்து ஆதரவு சொன்ன அனைவருக்கும் சால்வைகள் போர்த்தி நன்றி கூறினார் முதல்வர் ஓபிஎஸ். காத்திருந்த தொண்டர் கூட்டம் முதல்வர் வாழ்க என்று முழக்கமிடுகிறது. எங்க முதல்வர் ஓபிஎஸ்தான். அம்மா அடையாளம் காட்டிய அவரை மாற்றக்கூடாது என்று கூறிக்கொண்டே சென்றனர் பெண் தொண்டர்கள். ஜெயலலிதாவின் மீது அதீத பற்றுக் கொண்ட பெண்களின் ஆதரவு ஓபிஎஸ்க்குதான் கிடைத்து வருகிறது என்பதுதான் உண்மை.