பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வந்தது. இன்று பெங்களூரில் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் குவித்தது. பின்னர் 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்தியா, 17.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
பிரகாஷா ஜெயராமையா அவுட்டாகாமல் 99 ரன்களும், அஜய் குமார் ரெட்டி 43 ரன்களும் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்கள்.
இந்தியா 9 போட்டிகளில் 8-ல் வெற்றி பெற்றும், பாகிஸ்தான் 9 போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2012-ல் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.