இயக்குநர் சசி மற்றும் இயக்குநர் சுசீந்திரன் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் எஸ் குமார் இயக்கவுள்ள படம் ‘நகல்’. ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே மையமாக கொண்டு உருவாக இருக்கும் இந்த ‘நகல்’ படத்தில் நடிப்பதற்கு சில முன்னணி கதாநாயகிகளோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், டப்மாஷ் புகழ் மிர்னாலினி ரவி இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தை ‘கரிஸ்மாட்டிக் கிரியேஷன்ஸ்’ சார்பில் மணிகண்டன் சிவதாஸ் தயாரிக்க இருக்கிறார்.
மிர்னாலினி ரவி தனது தனித்துவமான டப்மாஷ்கள் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். தமிழகத்தில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. டப்மாஷில் அவரது முகபாவமும், அவரது ஒவ்வொரு அசைவுமே ரசிகர்களுக்கு மிர்னாலினி மீதான ஈர்ப்பு அதிகரிக்க காரணம். இந்நிலையில், அவர் `நகல்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதால் சிறிய வீடியோவில் மட்டுமே பார்த்த ரசித்த அவரது ரசிகர்கள், இனி வெள்ளித்திரையில் காணலாம்.
நகல் படம் குறித்து இயக்குநர் சுரேஷ்குமார் தெரிவித்ததாவது,
“ஒரு முற்றிலும் தனித்துவமான கதை களத்தோடு தான் நான் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அப்படி இருந்து நான் உருவாக்கி இருக்கும் கதை தான் இந்த ‘நகல்’. ஒரு பெண்ணின் அமானுஷிய அனுபவங்களை மையமாக கொண்டு தான் எங்களின் ‘நகல்’ படத்தின் கதை நகரும். ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் இருப்பதால், ‘நகல்’ படத்தின் கதையை எழுதுவதற்கு சற்று சவாலாகவே இருந்தது.
தனித்துவமான முயற்சியில் முழுக்க முழுக்க திகில் அனுபவங்களை கொடுக்கும் ஒரு திரைப்படமாக ‘நகல்’ இருந்தாலும், ரசிகர்களை உற்சாகப்படுத்த கூடிய எல்லா சிறப்பம்சங்களையும் இந்த கதையில் உள்ளடக்கி இருக்கின்றேன்.
ஒளிப்பதிவாளர் – பிரசன்னா, இசையமைப்பாளர் – ஆண்டனி ஜார்ஜ், படத்தொகுப்பாளர் – லோகேஷ், கலை இயக்குநர் – ரூபெர்ட், ஸ்டண்ட் மாஸ்டர் – சக்தி சரவணன் மற்றும் டிசைனர் – ஜோசப் ஜாக்சன் என பல திறமை வாய்ந்த தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘நகல்’ படத்தில் பணியாற்ற இருக்கின்றனர்.