ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருவோருக்கு சுடச்சுட உணவு ‘எம்.ஜி.ஆரை நினைவுபடுத்துகிறார்’ : தொண்டர்கள் நெகிழ்ச்சி

ஓ.பன்னீர்செல்வம் இல்லத்துக்கு வருவோருக்கு சுடச்சுட உணவு ‘எம்.ஜி.ஆரை நினைவுபடுத்துகிறார்’ தொண்டர்கள் நெகிழ்ச்சி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க அடிமட்ட தொண்டர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

கடந்த 8-ந்தேதி முதல் சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் இருந்து அ.தி.மு.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் ஓ.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிப்பதற்காக சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவருடைய இல்லத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள தொண்டர்கள் வருகை தருகின்றனர். இவ்வாறு தனது இல்லம் வரும் தொண்டர்களுக்கு எந்தவித குறையும் இன்றி மனநிறைவோடு திரும்பி செல்ல வேண்டும் என்பதில் ஓ.பன்னீர்செல்வம் கண்ணும், கருத்துமாக இருக்கிறார்.

தொண்டர்களுக்கு காலை, மதியம், இரவு என 3 வேளை சுடச்சுட உணவு, குடிநீர், டீ-காபி போன்றவை தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. தனக்கு ஆதரவு தெரிவிக்க வரும் அனைவரையும் ஓ.பன்னீர்செல்வம் இன்முகத்துடன் வரவேற்று அன்பை பொழிகிறார்.

இதுகுறித்து அ.தி.மு.க. தொண்டர்கள் கூறும்போது, ‘ எம்.ஜி.ஆர். தன்னை காண வருவோர் பசியுடன் திரும்பக் கூடாது என்று உணவு பரிமாறுவதை வழக்கமாக கொண்டிருந்தார். தற்போது ஓ.பன்னீர்செல்வத்தின் உபசரிப்பை பார்க்கும்போது எம்.ஜி.ஆரை அவர் நினைவுப்படுத்துகிறார்.’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினர்.