ஜெ.க்கு 4 ஆண்டு சிறை- ரூ100 கோடி அபராதம்: நீதிபதி குமாரசாமி ரத்து செய்த குன்ஹா தீர்ப்பு இதுதான்..

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை அதிரடியாக ரத்து செய்துள்ளது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி..

1991-96ஆம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு 18 ஆண்டுகாலம் நடைபெற்றது.

இந்த வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் தண்டனை விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்திருந்தார். தற்போது குன்ஹா தீர்ப்பை கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.

நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்… அதனால் ஏற்பட்ட விளைவுகள் ஒரு மீள்பார்வை:

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய பேருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஜெயலலிதாவுக்கு மட்டும் ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் ஜெயலலிதா வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி, வைரம் உள்ளிட்ட பல்வேறு விலை மதிப்பு மிக்க ஆபரணங்களை ஏலம் விட்டு அபராதம் வசூலிக்கப்பட வேண்டும்.

சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோனது.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதால் ஜெயலலிதாவின் எம்.எல்.ஏ. பதவியும் உடனடியாக ரத்தானது.

ஊழல் தடுப்பு பிரிவில் ஒருவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தண்டனை விதித்தால் அவருக்கு எத்தனை ஆண்டு தண்டனை வழங்கப்படுகிறதோ அந்த தண்டனை காலம் முடியும் வரையும், அதன் பிறகு 6 ஆண்டுகளும் தேர்தலில் நிற்க முடியாது.

இதன்படி மொத்தம் 10 ஆண்டுகாலம் ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத நிலை இருந்தது.

தற்போது மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பொறுப்பேற்க உள்ளார்.