5 கிராமி விருதுகளை அள்ளி பிரிட்டன் பாடகி அடேல் அசத்தல்

இசையுலகின் மிகவும் உயரிய விருதாக கருதப்படும் ‘கிராமி’ விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சலெஸ் நகரில் இன்று நடைபெற்றது. இந்த விருதுக்காக பரிந்துரைக்கப்பட்ட 5 பட்டியலின்கீழ், பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல பாடகியான அடேல் அனைத்து விருதுகளையும் வென்றுள்ளார்.

கடந்த ஆண்டின் சிறந்த இசை ஆல்பம், சிறந்த இசைதட்டு, சிறந்த பாடல், சிறந்த பாப் பாடகி, சிறந்த பாப் பாடல் ஆல்பம் ஆகிய ஐந்து விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். இவரோடு போட்டியிட்ட பிரபல பாடகி பெயான்ஸ் விருதுக்கான வாய்ப்பை இழந்தபோதும், விழா மேடையில் தனது இசை மழையால் ரசிகர்களை மகிழ்வித்தார்.

இந்தியாவை சேர்ந்த தபேலா கலைஞர் சந்தீப் தாஸ் பங்களிப்புடன் தயாரிக்கப்பட்ட ‘சிங் மி ஹோம்’ (Sing Me Home) என்ற இசை தொகுப்பு சர்வதேச இசை என்ற பிரிவின்கீழ் கிராமி விருதை வென்றுள்ளது. இந்த இசை தொகுப்பில் உலகின் மிகவும் பிரபலமான இசை கலைஞர்களின் கைவண்ணம் இடம்பெற்றுள்ளது, குறிப்பிடத்தக்கது.

பிரபல சிதார் இசைக்கலைஞர் அனோஷ்கா ஷங்கர் என்பரின் ‘லேன்ட் ஆஃப் கோல்ட்’ (Land of Gold) என்ற சிதார் இசை தொகுப்பும் இதே பிரிவின்கீழ் தேர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. ஆனால், ‘சிங் மி ஹோம்’ அந்த வாய்ப்பை தட்டிப் பறித்து சென்றது.