வன்னியில் 3 சிறுவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர்களுக்கு வைத்தியசாலைத் தனிப் பிரிவில் வைத்துச் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன.
இந்த நோய்த்தொற்று அச்சுறுத்தல் வடக்கு மாகாணம் முழுவதும் உள்ளது என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2008-ம் ஆண்டுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்தில் பன்றிக் காய்ச்சல் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இது பற்றிய எச்சரிக்கைத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்த நோய்த் தொற்றுக்கான சிகிச்சையைப் பெற்றுக்கொள்ள முடியும். காய்ச்சலினால் பீடிக்கப்பட்டவர்களுடன் வருபவர்களுக்குச் சிறப்புக் கவனம் செலுத்துமாறு பணிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வட்டக்கச்சி, சம்புக்குளம், முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு, றெட்பானா மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் 5 வயதுக்குட்பட்ட 3 பேர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்கள் 3 பேருக்கும் கடந்த ஒரு வாரகாலமாக சிகிச்சை வழங்கப்படுகிறது. சிறுவர்களின் நோய்த் தொற்றுத் தொடர்பான மேலதிக பரிசோதனைக்கு அவர்களின் குருதி மாதிரிகள் மருத்துவ ஆய்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.
அத்துடன், ஆய்வு நிலையத்தால் ஞாயிற்றுக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட அறிக்கையில் 3 சிறார்களுக்கும் எச்1 என்1 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அவர்கள் தனியான இடத்தில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நோய் காற்று மூலமாகப் பரவும் வாய்ப்பு உள்ளதனால் தனியான பிரிவில் வைத்துச் சிகிச்சை வழங்கப்படவேண்டும்.
ஏனையவர்களைவிட கர்ப்பிணிகள் மற்றும் சிறார்களுக்கு இந்தத் தொற்று ஏற்பட்டால் சிறப்புக் கவனம் செலுத்திச் சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வெள்ளம் வரும்முன் அணைக்கட்ட வேண்டும் என்பது போல இந்த நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.
காலத்துக் காலம் இவ்வாறான வைரஸ் காய்ச்சல் பரவுவதுண்டு. சிலவேளைகளில் தாக்குதிறன் கூடிய வைரஸ் வகைகள் தொற்றும்போது கடுமையான விளைவுகள் மனிதருக்கு ஏற்படும்.
இது கர்ப்பிணித் தாய்மார், குழந்தை பிரசவித்து சில நாட்களான தாய்மார், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர், முட்டுவருத்தம், சலரோகம் உள்ளவர்கள் ஆகியோரை தாக்கும் திறன் அதிகம்.
இந்த நோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்து உரிய நேரத்தில் உரிய சிகிச்சை வழங்கினால் தேவையற்ற தாய், சேய் உயிரிழப்பை தடுக்கலாம்.
சளிக்காய்ச்சல், தடிமன், தொண்டைப் புண், தலையிடி, உடல் வலி என்பன காணப்படுவதோடு, நோயின் அபாய அறிகுறிகளாக அதிகூடிய காய்ச்சல், மூச்சுவிட முடியாமை, நெஞ்சுநோ, மறதிக்குணம், நெஞ்சுப்படபடப்பு, வலிப்பு, வயிற்றோட்டம் ஆகியவை இருக்கும். இந்த அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக அரச வைத்தியசாலையை நாடி உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மேலும், சாதாரண வைரஸ் காய்ச்சலிலிருந்து எச்1என்1 வைரஸ் காய்ச்சலினை வேறு பிரித்து அறிவது கடினம். தகுந்த ஆய்வுகூட மற்றும் நிபுணத்துவ சேவையும் சிறப்பு மருத்துவ நிபுணர்களது கண்காணிப்பும் இதற்குத் தேவை என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.