உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் கருணாவின் புதிய கட்சி..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையில் உதயமாகியுள்ள தமிழ் ஐக்கிய சுதந்திர முன்னணி, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய விநாயகமூர்த்தி முரளிதரன், அதற்குரிய ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன என்றும் கூறினார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதியதொரு அரசியல் கட்சியை நேற்றுமுன்தினம் கருணா ஆரம்பித்தார். இதற்கான நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது.

கட்சியின் பொதுச்செயலராக கமலதாசன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் குறித்து கருத்து வெளியிட்ட அவர்,

தமிழ் மக்களிடையே அரசியல் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியல் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

எனவே, வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலும், அரசியல் உரிமைகள் பெற்றுக் கொடுக்கும் நோக்கிலுமே எமது கட்சி உருவாகியுள்ளது.

அத்துடன், வடக்கு, கிழக்கில் தமிழ் அரசியலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை புதிய கட்சி நிரப்பும் என்ற நம்பிக்கை இருக்கின்றது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களின் நாடி பிடித்து பார்க்கப்படும்.

வெற்றி தோல்வி முக்கியமில்லை. மக்களுக்கான சேவையே எமக்கு தேவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற பின்னர், மஹிந்த அரசில் இணைந்து கொண்ட கருணாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவராக நியமித்திருந்தார்.

எனினும், ஆட்சி மாற்றத்தின் பின்னர் அந்தப் பதவியை அவர் துறந்தார். இந்நிலையில்,கடந்த மாதம் 27ஆம் திகதி நுகேகொடவில் மஹிந்த அணியினராகிய பொது எதிரணியினர் நடத்திய பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.

எதிர்காலத்தில் தாம் அரசியலில் ஈடுபடுவதானால், மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே செயற்படுவேன் என்று உரையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.