ஐ.நாவின் கலப்பு நீதிமன்றப் பரிந்துரையை நீக்குவதற்கு ஒருபோதும் அனுமதியோம்..! கூட்டமைப்பு போர்க்கொடி!!

ஐ.நா. தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ள கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக எமக்கு அறியக் கிடைத்துள்ளது.

ஐ.நா. தீர்மானத்தில் எந்தவொரு மாற்றத்தையும் மேற்கொள்வதற்கு நாம் அனுமதிக்கமாட்டோம். அதற்கு ஒருபோதும் இணங்கமாட்டோம். அதனை முற்றுமுழுதாக எதிர்ப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஐ.நா.வில் புதிதாக இந்த ஆண்டு தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சில தரப்பினர் கூறி வருகின்றனர்.

புதிய தீர்மானம் தேவையில்லை. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அதன் பரிந்துரைகள் முக்கியமானவை.

போர்க்குற்ற விசாரணைப் பொறிமுறைக்கு கலப்பு நீதிமன்றப் பொறிமுறையையே ஐ.நா. தீர்மானம் பரிந்துரைத்துள்ளது. இதனை மாற்றுவதற்கு – நீக்குவதற்கு இலங்கை அரசு முழு மூச்சாக முயல்வதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது.

அதற்கு நாம் இடமளிக்கமாட்டோம். அந்தப் பரிந்துரையில் எந்தவொரு மாற்றமும் செய்ய முடியாது. இலங்கை அரசு 2015ஆம் ஆண்டு இணங்கி ஏற்றுக்கொண்ட விடயம்தான் கலப்பு நீதிமன்றப் பொறிமுறை. அதனை மாற்ற நாம் ஒருபோதும் சம்மதிக்கமாட்டோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.