சரணடைய கால அவகாசமே கிடையாது; உச்சநீதிமன்றத்தில் சசிகலா கோரிக்கை நிராகரிப்பு!

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சசிகலா தாம் சரணடைய கால அவகாசம் கோரியதை உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதனால் சசிகலா உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்து சிறைக்கு போக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள்தான் என்பதை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டாலும் அவர்தான் இந்த வழக்கின் மாஸ்டர் மைண்ட் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் விளாசியுள்ளனர்.

மேலும் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விதித்த 4 ஆண்டு சிறைத் தண்டனையையும் ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தனர். அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் சொத்து குவிப்பு நடவடிக்கைகளையும் கடுமையாக சாடினர்.

அத்துடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நீதிபதிகள் பிசி கோஷ், அமித்வா ராய் முன்னிலையில் சசிகலாவின் வழக்கறிஞர் இன்று காலை வாய்மொழியாக சரணடைய கால அவகாசம் கோரினார்.

சசிகலாவின் உடல்நிலையை காரணம் காட்டி இந்த கால அவகாசம் கோரப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்ற நீதிபதிகளோ, கால அவகாசம் எதுவும் தரவே முடியாது என திட்டவட்டமாக கூறி சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்தனர்.

இதனால் சசிகலா பெங்களூரு நீதிமன்றத்தில் உடனே சரணடைந்து சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி சசிகலா சரணடையாவிட்டால் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வர்.