விபத்தை உருவாக்கும் ‘வேகத்தடைகள்’

சாலைகளில் ஆங்காங்கே காணப்படும் வேகத்தடைகள் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்துவதை விட விபத்துகள் நடைபெறுவதற்கு காரணமாக இருக்கின்றன.

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தி விபத்துகளை தவிர்க்க சாலைகளில் வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றன. நகர எல்லைக்கு உட்பட்ட சாலைகளில் மட்டுமே இவை ஏற்படுத்தப்படுகின்றன. மருத்துவமனைகள், பள்ளிகள், கோவில்கள், குடியிருப்பு பகுதிகள், ரெயில்வே கிராசிங்குகள், சிறிய பாலங்கள் உள்ளிட்ட மக்கள் புழக்கம் அதிகம் உள்ள சில இடங்களில் வேகத்தடைகள் அமைக்க சாலை விதிகள் இடம் அளிக்கின்றன. இவற்றின் அதிகபட்ச உயரம் ½ அடியும், அகலம் 15 இஞ்ச் என்ற அளவிலும் இருக்க வேண்டும்.

இதன்படி மக்களிடம் இருந்து வரும் கோரிக்கையை அடுத்து மாவட்ட நிர்வாகம் அல்லது நெடுஞ்சாலைத் துறை குறிப்பிட்ட இடங்களில் வேகத்தடைகளை அமைக்கிறது. சாலைகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள வேகத்தடைகள் வாகன ஓட்டுனர்களின் கண்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் அதன் மேல் வர்ணம் பூசியிருக்க வேண்டும். மேலும், வேகத்தடை இருப்பதை வாகன ஓட்டுனர்களுக்கு தெரிவிக்க சாலையின் ஓரத்தில் வரைபடம் மற்றும் அந்த இடத்தில் வாகனங்கள் செல்ல வேண்டிய வேக அளவு குறிப்பிட்ட எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும். தன்னிச்சையாக எவரும் சாலைகளிலோ, தெருக்களிலோ தடை ஏற்படுத்தக் கூடாது என்பது உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

தற்போது நகரில் விதிமுறைகளுக்கு மாறாக கண்டகண்ட இடங்களில் எல்லாம் வேகத் தடைகள் என்ற பெயரில் முக்கியச் சாலைகள், குறுக்கு சந்துகள், தெருக்களில் சிறிய குன்றுகள் அளவில் வேகத்தடைகளை அமைத்துள்ளனர். இவற்றை அமைக்க மாவட்டம் அல்லது மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளதா என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. சரியான விதிமுறைகளை கடைபிடிக்காமல் அமைக்கப்பட்டுள்ள இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டுனர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருக்கின்றன.

மதுரை நகரில் சீமைக்கருவேல மரங்களை போல வேகத்தடைகளும் எங்கு பார்த்தாலும் நிறைந்து கிடக்கின்றன. நகரின் சிறிய சாலைகளில் கூட 5- க்கும் மேற்பட்ட வேகத்தடைகள் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த வேகத்தடைகள் வாகன ஓட்டுனர்களின் முதுகு எலும்பை பதம் பார்க்கின்றன. சில வாகன ஓட்டுனர்கள் இந்த வேகத்தடைகள் இருப்பது தெரியாமல் இவற்றின் மீது மோதி விழுந்து விபத்திற்கு உள்ளாகின்றனர். வாகன விபத்தில் தேசிய அளவில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. இந்த எண்ணிக்கையில் கணிசமான அளவு விதிமுறைக்கு புறம்பான வேகத்தடைகளால் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சினை குறித்து நெடுஞ்சாலைத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கூறியதாவது:- சாலைகளின் எந்த இடங்களில் வேகத்தடைகள் அமைக்கலாம் என்பதை சாலை பாதுகாப்பு குழு ஆய்வு செய்யும். இந்த குழுவின் அறிக்கைப்படி மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத் துறையும் பரிசீலனை செய்து வேகத்தடை அமைக்க ஒப்புதல் வழங்கும். இதற்கடுத்து விதிமுறைப்படி வேகத்தடையும், அது குறித்த எச்சரிக்கை பலகைகளும் அந்த இடங்களில் வைக்கப்படும். இது தான் நடைமுறை.