பெண்களுக்கு யோகா அவசியம்!

உடல், மனம் தொடர்பான பிரச்சனைகள் நாளுக்குநாள் அதிகரிக்கின்றன. அதிலும் குறிப்பாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு கூடுதல் வேலை, பொறுப்பு, அவசரங்கள் போன்றவற்றால் உடல்ரீதியான பிரச்சனைகள் உற்சாகத்தை இழக்கவைத்துவிடும்.

மன அழுத்தம், வயிற்று வலி, மலச்சிக்கல், கழுத்து வலி, தலை வலி, உடல் பருமன், முதுகு வலி போன்ற பாதிப்புகளும் அதிகரிக்கின்றன. எடுத்ததற்கு எல்லாம் மாத்திரை- மருந்து என்று ஓடும்போது இன்னும் பாதிப்பு அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

நடைப் பயிற்சி, ஜிம், வீர விளையாட்டுக்கள் என பலவிதமான உடற்பயிற்சிகள் இருந்தாலும், யோகாவில்தான் உடல், மனம், உளவியல், மூச்சு எனப் பல நிலைகளின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்கமுடியும். குறுகிய நேரத்தில் பயிற்சி செய்தாலும் தொடர்ந்து செய்யும்போது பல நன்மைகள் கிடைக்கின்றன.

சின்னச் சின்னப் பிரச்சனைகளுடன், ஆரோக்கியக் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் அளிக்கும் வகையில் யோகா பயிற்சி உள்ளது. பெரும் பிரச்சனை உள்ளவர்கள் யோகா சிகிச்சை மூலம் பலம் கிடைக்கும்.

யோகாவுக்குத் தயாரானதும் வேறு எண்ணங்கள், உணர்வுகளில் இருந்து வெளிவந்து, சிறிது நேர அமைதிக்குப் பின் பயிற்சிகளைத் தொடங்கினால், கூடுதல் பலன் கிடைக்கும். பெண்கள் யோகா செய்வதன் மூலம் அவர்கள் உடலுக்கு தேவையான சக்தியும், வலிமையும் கிடைக்கிறது. மேலும் மன உளைச்சல், சோர்வு போன்ற பிரச்சனைகள் தீரும்.