சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் போயஸ் தோட்டத்தில் இருந்து பெங்களூரு புறப்பட்டுள்ளனர். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் நேராக பெங்களூரு செல்கிறார் சசிகலா.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கூட்டு சதி செய்தவர்கள்; குற்றவாளிகள் என்பதை உச்சநீதிமன்றம் நேற்று உறுதி செய்தது. சசிகலா உள்ளிட்ட மூவரின் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ30 கோடி அபராதத்தையும் உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.
இத்தீர்ப்பை அளித்த நீதிபதிகள் பிசி கோஷ் மற்றும் அமித்வா ராய் ஆகியோர் ஊழல் தொடர்பாகவும் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோரின் கூட்டு சதி குறித்தும் மிகக் கடுமையாக சாடியிருந்தனர். சசிகலா உள்ளிட்டோர் உடனே பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராகவும் உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைய சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் இன்று போயஸ் தோட்டத்தில் இருந்து கிளம்பினார். எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் யாரும் வழியனுப்பாமேலேயே சசிகலா கிளம்பினார்.
பெங்களூரு செல்லும் முன்பாக எம்ஜிஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஏராளமான நிர்வாகிகள் காத்திருந்து வழியனுப்பினர். அவருடன் தனி தனி வாகனங்களில் உறவினர்கள் புறப்பட்டனர். திவாகரனின் மகன் ஜெய ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய உறவினர்களும் உடன் செல்கின்றனர்.