சசிகலா கைது செய்யப்படுவார் என்பதை சூசகமாக கடந்த மாதமே சூசகமாக உணர்த்தியுள்ளார் சிவன்மலை ஆண்டவர். இந்த கோவிலில் உள்ள பூஜை பெட்டியில் இரும்பு சங்கிலி வைத்து பூஜை செய்யப்பட்ட போதே முக்கிய பிரமுகர் கைதாவார் என்று பேசப்பட்டது. அது உண்மையாகிவிட்டதாக பக்தர்கள் கூறி வருகின்றனர்.
காங்கயம்-திருப்பூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது இந்த சிவன்மலை. இந்த மலை மீது சுப்ரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள இறைவன் பக்தரின் கனவில் வந்து உத்தரவிடும் பொருளை வைத்து பூஜை செய்வது ஐதீகம்.
பக்தரின் கனவில் வந்து, தான் விரும்பும் ஒரு பொருளை சொல்வார். அந்த பொருளை, கோயிலில் இருக்கும் பெட்டியில் வைத்து பூஜை செய்வார்கள். இதனையடுத்து அந்த பொருளால் மிகப்பெரிய நன்மையோ, தீமையோ ஏற்படும்.
உத்தரவு பெட்டி
கடந்த சில ஆண்டுகளாகவே சிவன் மலை கோவிலில் உத்தரவு பெட்டியில் வைத்து சர்க்கரை, அரிசி, தண்ணீர், பென்சில், கோனார் தமிழ் உரை நோட்ஸ், வேட்டி, துண்டு, பால், மோர், உப்பு, அச்சுவெல்லம், துளசி இலைகளும் கூட வைத்து பூஜை செய்யப்பட்டுள்ளது.
தண்ணீர் பூஜை
தண்ணீரை வைக்கச் சொல்லி உத்தரவு வந்தால், அந்த காலகட்டத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும். அல்லது பஞ்சம் தீர்ந்து பெருவெள்ளம் ஏற்படும். 2004ஆம் ஆண்டு தண்ணீரை வைக்கச்சொல்லி உத்தரவு வந்தபோதுதான் சுனாமி ஏற்பட்டதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
மஞ்சள் வைக்கச்சொல்லி உத்தரவு வந்தது. அந்த நேரத்தில்தான் மஞ்சள் தங்கத்தின் விலையை விட அதிக அளவுக்கு மார்க்கெட்டில் விற்பனையானது. அதன்படி இப்போது இரும்புச் சங்கிலியை வைத்து வழிபடச் சொல்லி உத்தரவு வந்திருக்கிறது.
இரும்பு சங்கிலி
இதையடுத்து சிவன்மலை கோயிலில் இரும்புச்சங்கிலி கடந்த ஜனவரி 10ஆம் தேதி முதல் வைத்து பூஜை செய்யப்படுகிறது. அந்த கோவிலில் ஆண்டவன் உத்தரவு என்று எழுதப்பட்ட ஒரு பெட்டி உள்ளது. இந்த பெட்டியில் இரும்பு சங்கிலியை வைத்து எந்த பக்தரின் கனவில் வந்து கடவுள் உத்தரவிட்டார் என்றும் எழுதப்பட்டுள்ளது
சசிகலாவிற்கு சிறை
இரும்புச் சங்கிலி வந்திருப்பதால், நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்கள் வழக்குகளில் சிக்கி, கைது செய்யப்படுவார்கள் என்று கூறி வந்தனர். அது போலவே சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்புக்கு காத்திருந்த சசிகலா, இப்போது தண்டனை பெற்று சிறை சென்றுள்ளார். இது காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை என்று சிலர் கூறலாம். ஆனால் 2016ஆம் ஆண்டு ஜூன் மாதமே விசாரித்து முடிக்கப்பட்ட வழக்கில் சசிகலா முதல்வராக ஆசைப்பட்ட போது வந்ததுதான் சிவன் மலை ஆண்டவரின் உத்தரவு பெட்டி மீது பக்தர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.