பாதுகாப்பு காரணங்களுக்காக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 வருட தண்டனை பெற்ற சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 47வது கூடுதல் குடிமை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி அஸ்வத் நாராயண் உத்தரவிட்டார்.
மருத்துவ பரிசோதனை முடிந்ததும் அவரும், அவரது அண்ணன் மனைவியும் சக குற்றவாளியுமான இளவரசியும் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுதாகரனும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஸ்வத் நாராயணனிடம் சரணடைந்தார். அவரும் உரிய சோதனைகளுக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் சசிகலா இன்று சிறைக்குப் போக முக்கியக் காரணமாக இருந்த சுப்பிரமணியன் தனது டுவிட்டரில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், பாதுகாப்பு காரணங்களுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் இதற்கான நடவடிக்கையை முதல்வரானதும் எடப்பாடி பழனிச்சாமி எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
சாமி ஆரம்பத்தில் சசிகாலவுக்குக் கொடி பிடித்தார். அவர் ஜெயிலிக்குப் போய் விட்ட நிலையில் சசி தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேச ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.