ரூ. 66.5 கோடி சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குள் போயுள்ள சசிகலா விடுதலையாகி வெளியே வரும் போது அவரது கையில் ரூ. 65,700 இருக்குமாம். அதாவது சிறையில் இருக்கும் காலத்தில் அவர் பார்க்கப் போகும் வேலைக்கான ஊதியம் இது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சசிகலா. அவருடன் அவரது அண்ணி இளவரசியும் அடைக்கப்பட்டுள்ளார். 3.6 வருடங்கள் இவர்கள் சிறையில்தான் இருந்தாக வேண்டும். இடையில் பரோல் கேட்டு வெளியே வரலாம்.
சிறையில் தண்டனை பெற்ற கைதிகள் ஏதாவது வேலை செய்ய வேண்டும். அந்த வகையில் சசிகலா, இளவரசியும் வேலை பார்க்கப் போகிறார்கள். அதற்கு அவர்களுக்கு ஊதியமும் உண்டு. தினசரி அவர்களுக்கு ரூ. 50 கூலியாக கிடைக்கும்.
சீருடையில் சசிகலா
தண்டனைக் கைதிகளுக்கு பெங்களூரு சிறையில் சீருடை உண்டு. பெண்கள் நீல நிற சேலை அணிந்து இருக்க வேண்டும். அதன்படி நேற்று சசிகலா, இளவரசிக்கு நீல நிற சேலையும், தட்டு, டம்பளர் ஆகியவையும் கொடுக்கப்பட்டு விட்டது.
சசிகலாவுக்கு மெழுகுவர்த்தி தயாரிக்கும் வேலை கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதில் அவருக்கு தினசரி ரூ. 50 சம்பளமாக தரப்படும். இந்தப் பணத்தை உடனடியாக கையில் கொடுக்க மாட்டார்கள். தண்டனைக் காலம் முடிந்து போகும்போதுதான் அவருக்கு இந்த கூலி கையில் மொத்தமாக கிடைக்கும்.
ரூ. 65,700
தினசரி கூலி ரூ. 50 என்று வைத்துக் கொண்டால், தண்டனைக் காலத்தை சசிகலா முழுமையாக அனுபவிக்கிறார் என்றால், அவர் தண்டனை முடிந்து வெளியே வரும்போது அவரது கையில் அவர் மெழுகுவர்த்தி தயாரித்து சம்பாதித்த கூலி ரூ. 65,700 இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலை கட்டாயமில்லையாம்
இதற்கிடையே, விஐபி கைதிகளுக்கு சிறையில் கண்டிப்பாக வேலை பார்த்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் ஒரு தகவலும் வெளியாகியுள்ளது. இருப்பினும் அதை சிறை நி்ர்வாகம் உறுதிப்படுத்தவில்லை.