‘அசைவ பவுண்டு’ நோட்டுகளை திரும்பப்பெற முடியாது: இங்கிலாந்து வங்கி திட்டவட்டம்!!

ஆடு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பை கலந்து தயாரிக்கப்பட்டுள்ள 5 பவுண்டுகள் மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என பிரிட்டனில் வாழும் இந்து மக்கள் உள்ளிட்ட சைவப் பிரியர்களின் கோரிக்கையை இங்கிலாந்து வங்கி நிராகரித்து விட்டது.

பிரிட்டன் நாட்டில் காகிதத்தில் அச்சடிக்கப்படும் பவுண்டு (ரூபாயை போன்ற அந்நாட்டு நாணயம்) நோட்டுகளை ஒழித்துவிட்டு, பிளாஸ்டிக் கலந்த பாலிமர் நோட்டுகளை மக்களிடையே புழக்கத்தில்விட அந்நாட்டின் மத்திய வங்கியான இங்கிலாந்து வங்கி தீர்மானித்தது.

இதன் முதல்கட்டமாக, ஐந்து பவுண்டுகள் முகமதிப்பு கொண்ட புதிய பாலிமர் நோட்டுகள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நோட்டுகளை தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருளுடன் ஆடு மற்றும் மாட்டிறைச்சி கொழுப்பால் உருவாகப்பட்ட ‘டால்லோ’ என்ற பொருள் கலந்திருப்பதை அறிந்த அந்நாட்டில் வாழும் இந்து மக்கள் மற்றும் அசைவத்தை துறந்து, சைவ உணவை விரும்பி சாப்பிடும் மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக, நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த 5 பவுண்டு நோட்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்குமாறும் கோயில் நன்கொடை போன்றவற்றுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும் இங்குள்ள இந்துக்கள் தெரிவித்துள்ளனர். சர்ச்சைக்குரிய இந்த நோட்டுகளை இங்கிலாந்து மத்திய வங்கி திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. ஆனால், காகிதத்தில் அச்சடிக்கப்படும் நோட்டுகளின் ஆயுட்காலம் இரண்டாண்டுகளாக இருக்கும் நிலையில், புதிய பாலிமர் நோட்டுகளின் ஆயுட்காலம் சுமார் ஐந்தாண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளதால், இந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க அரசு முன்வரவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், நோட்டுகளை திரும்பப்பெற வேண்டும் என பிரிட்டனில் வாழும் இந்து மக்கள் உள்ளிட்ட சைவப் பிரியர்களின் கோரிக்கையை இங்கிலாந்து வங்கி தற்போது நிராகரித்துள்ளது.

மேலும், இதே ‘டால்லோ’ கலந்து தயாரிக்கப்பட்ட பத்து பவுண்டு முகமதிப்புள்ள புதிய பாலிமர் நோட்டுகள்  ஏற்கனவே அறிவித்தபடி, வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் எனவும் அறிவித்துள்ள இங்கிலாந்து வங்கி, அடுத்தடுத்து தயாரிக்கப்பட்டு வரும் 2020-ம் ஆண்டு வெளியாகவுள்ள 20 பவுண்டு நோட்டு தயாரிப்பின்போது, ‘டால்லோ’வுக்கு பதிலாக மாற்றுப் பொருளை கலப்பது தொடர்பாக ஆய்வு செய்து, பரிசீலிக்கும்படி, தங்களுக்கு தேவையான பாலிமர் என்னும் மூலப்பொருளை சப்ளை செய்யும் நிறுவனத்தை கேட்டுக் கொண்டுள்ளது.