அல்லாஹ்வை நிராகரிப்பது கொலையை விடப் பெரும் ‌குற்றம்!

நபி முஹம்மது (ஸல்), நபித் தோழர் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷிடம் ஒரு கடிதத்தை எழுதிக் கொடுத்தார்கள். அதனை இரண்டு நாட்களுக்குப் பிறகு திறந்து படிக்கச் சொன்னார்கள். அதில் அவர்கள் “நக்லா என்ற இடத்தில், குறைஷிகளின் வியாபாரக் கூட்டம் வரும், வந்தவுடன் எனக்குச் செய்தி அனுப்புங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்கடிதத்தை திறந்து படித்த அப்துல்லாஹ், ஒரு சிறு தோழர் படையைத் திரட்டி “உங்களை நான் கட்டாயப்படுத்தவில்லை. யாருக்கு வீர மரணம் விருப்பமானதோ என்னோடு வாருங்கள் மற்றவர்கள் திரும்பிவிடலாம்” என்றார்கள்.

நபிகளார் சொன்னபடியே ‘நக்லா’ என்ற இடத்தை வந்தடைந்ததும் அங்குக் குறைஷிகளின் வியாபாரக் குழு ஒன்று உலர்ந்த திராட்சை, பதனிடப்பட்ட தோல் மற்றும் வியாபாரப் பொருட்களுடன் இருப்பதைப் பார்த்தார்கள். நபி முஹம்மது (ஸல்) அவர்கள் கேட்டுக் கொண்டபடி, நபிகளாருக்கு செய்தி அனுப்பாமல் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தமது தோழர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்கள். அரபியர்கள் சில மாதங்களைச் சங்கைமிக்கப் புனித மாதமாகக் கருதுவார்கள்.

அம்மாதங்களில் போர் புரிவதும், சண்டையிடுவதும் தடுக்கப்பட்டிருந்தது. அப்துல்லாஹ் மற்றும் தோழர் படையினர் நக்லாவை அடையும்போது அது புனிதமான ரஜப் மாதத்தின் கடைசி நாளாக இருந்தது. இம்மாதத்தில் சண்டயிட்டால் அதன் கண்ணியத்தைக் குலைத்து விடுவோமென்று அஞ்சினர். ஆனால் போர் செய்யாமல் விட்டுவிட்டால் அவர்கள் இங்கிருந்து சென்றுவிடுவார்கள் என்றும் பேசிக் கொண்டனர். முடிவில் சண்டையிடலாம் என்று முடிவு செய்து போரை அதிரடியாகத் தொடங்கினர். குறைஷிகளில் சிலர் சிதறியோட, ஒருவரை அம்பெய்துக் கொன்றனர் மற்றும் இருவரை கைது செய்து வியாபாரப் பொருட்களையும் கைப்பற்றி மதீனாவிற்குத் திரும்பினர்.

சண்டையில் கிடைத்த பொருட்களை ‘கனீமா’ என்பர். இப்போரில் கிடைத்த கனீமத்துப் பொருட்களை ஐந்தில் ஒரு பங்கை இறைவனுக்கும் அவனது தூதருக்கும் ஒதுக்கினார்கள். இதுதான் வரலாற்றில் இஸ்லாமில் முதல் கனீமா பங்கு. ஆனால் நபி முஹம்மது (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் இந்த நடவடிக்கையை வெறுத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) “புனிதமான மாதத்தில் போர் செய்ய உங்களுக்கு யார் கட்டளையிட்டது?” என்று கோபமாகக் கேட்டார்கள்.

அநியாயமாகக் கொலை செய்துவிட்டீர்கள், புனிதமான மாதத்தில் எங்களுக்கு மாறு செய்துவிட்டீர்கள் என்று இதுதான் சந்தர்ப்பமென்று முஸ்லிம்கள் மீது நிராகரிப்பாளர்கள் அவதூறுகளை வீசினார்கள். அப்போது அல்லாஹ் “நபியே! புனிதமான விலக்கப்பட்ட மாதங்களான துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களில் போர் செய்வதைப் பற்றி உங்களிடம் இறைநிராகரிப்பவர்கள் கேட்கின்றனர்.

அதற்கு நீங்கள் கூறுங்கள், ‘அம்மாதங்களில் போர் புரிவது பெருங்குற்றம்தான், ஆனால், மனிதர்கள் அல்லாஹ்வுடைய பாதையைவிட்டுத் தடுப்பதும், அல்லாஹ்வை நிராகரிப்பதும், ஹஜ்ஜுக்கு அல்லது உம்ராவிற்கு வருபவர்களை மஸ்ஜிதுல் ஹராமுக்குள் வரவிடாது தடுப்பதும், குழப்பங்கள் புரிவதும், மக்காவில் வசிப்போரை நம்பிக்கை கொண்டோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அதை விட மிகப் பெரும் பாவங்கள். அது நம்பிக்கையாளர்களுக்கு அவர்கள் செய்துவரும் விஷமம் கொலையை விட மிகக் கொடியது” என்ற இறைவசனம் அருளப்பட்டது.

இந்த இறைவசனம் அருளப்பட்ட பின்பு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு நஷ்டஈடு வழங்கியதோடு, இரண்டு கைதிகளையும் விடுவித்தார்கள்.