கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அய்யனார் குல தெய்வமாக விளங்குகிறார். அய்யனார், சாஸ்தா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் இவரது வரலாறு தெய்வாம்சம் மிக்கது. சிவபெருமான், திருமால் ஆகியோரின் இரு பெரும் சக்தியின் அம்சமாக தோன்றியவர் அய்யனார்.
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது சிறைகாத்த அய்யனார் கோவில். 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த திருத்தலம். பூமியில் இருந்து தானாக, சுயம்புவாய் வெளிப்பட்ட இந்த அய்யனார் அபரிதமான சக்தி மிக்கவர். முற்காலத்தில் இந்த ஊர் வயலூர் என்று அழைக்கப்பட்டது. சோழர் ஆட்சி காலத்தில் தஞ்சாவூரை ஆண்ட மன்னன் கரிகாலன் பகை மன்னர்களை தோற்கடித்து எதிரிநாட்டு வீரர்களை கைது செய்து இங்கே சிறை வைத்ததால் இவ்வூர் பெயர் மருவி ‘சிறையூர்’ என்றானது.
தல வரலாறு :
முன்பெல்லாம் இந்த ஊருக்கு செல்லும் வழியில் நான்கு புறமும் மரங்களும், செடிகளும் அடர்ந்து வளர்ந்து இருக்க ஒற்றையடி பாதை வழியாக செல்ல வேண்டும். அந்த வழியாக மக்கள் நடந்தும், மாட்டு வண்டிகளிலும் சென்று வந்தனர். ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் அங்குள்ள ஒரு வேப்பமரம் அருகில் ஒரு சக்தி மேற்கொண்டு அவர்களை செல்ல விடாமல் தடுத்தது. உடனே அவர்கள் கற்பூரம் ஏற்றி, தீபாராதனைகாட்டி அங்கிருந்து செல்வர். பாத்திரங்களில் பால், தயிர் கொண்டு செல்பவர்கள் வேப்பமரம் அருகே சென்றவுடன் அவர்களை அறியாமலேயே நிலை தடுமாறி வேப்பமரத்தின் அடியில் பால், தயிர் பாத்திரங்கள் கவிழ்ந்து அபிஷேகம் செய்வதைப் போல கொட்டிவிடும். இந்த நிகழ்ச்சி வாடிக்கையாக நடந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் இந்த இடத்தில் தெய்வ சக்தி இருக்கிறது என்று நினைத்து அங்கு சென்று கற்பூரம் ஏற்றி வணங்கி வந்தனர்.
இந்தநிலையில் ஊர் பெரியவரின் கனவில் ஒரு காட்சி தெரிந்தது. அதில் அய்யனார் தோன்றி, வேப்பமரத்தின் கீழ் நான் புதைந்து இருக்கிறேன். பூமியை தோண்டி என்னை வெளியே எடுங்கள் என்று கூறினர். உடனே ஊர் பெரியவர் கிராம மக்களுடன் அங்கு சென்று அவர் குறிப்பிட்ட இடத்தில் மண்வெட்டியால் தோண்டினர். 3 அடி ஆழம் தோண்டியதும், புதைந்து இருந்த அய்யனார் வெளிப்பட்டார். மண்வெட்டியால் தோண்டியதில் அய்யனார் சிலையின் உதடு, இதழ், மூக்கில் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்தது. உடனே ஊர் பொதுமக்கள் பயபக்தியுடன் அய்யனாரை வணங்கி, தெரியாமல் செய்த குற்றத்தை பொறுத்தருள வேண்டும் என வேண்டிக்கொண்டு கற்பூர ஆராதனை காட்டினர். அய்யனார் அருளால் உடனே ரத்தம் வடிவது நின்றது. அய்யனார் அனைவருக்கும் அருளாசி புரிந்தார். மேலும் அந்த இடத்தில் சப்தகன்னியர்கள் சிலைகளும் கிடைத்தன. ஊர் மக்கள் அய்யனாருக்கு அந்த இடத்தில் சிறிய கோவிலை கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த காலக்கட்டத்தில் இளம்பெண் ஒருவர் இரவு நேரத்தில் அய்யனார் கோவில் இருக்கும் ஒற்றையடி பாதை வழியாக தனியாக நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வழிப்பறி கொள்ளையர்கள் அந்தப்பெண்ணை சூழ்ந்து கொண்டனர். செய்வதறியாது திகைத்த அந்த பெண் கொள்ளையர்களின் பிடியில் இருந்து தப்பிக்க வேகமாக ஓடினாள். அப்போது தூரத்தில் ஒரு விளக்கொளி தெரிந்தது. இதனால் அங்கு வீடு இருக்க வேண்டும் என்று நினைத்த அந்த பெண், வெளிச்சம் வந்த இடத்தை நோக்கி விரைந்து ஓடினாள். ஆனால் அவள் செல்ல, செல்ல வெளிச்சம் வந்த இடம் தூரமாகி கொண்டே சென்றது. அய்யனார் கோவிலுக்கு வந்த அந்தப்பெண் கதவைத் தட்டி, அய்யனாரே இந்த அபலைப் பெண்ணை காப்பாற்றும் என்று அபயக்குரல் எழுப்பினாள்.
அவளை பின்தொடர்ந்து வந்த கொள்ளையர்களும் கோவிலுக்குள் வந்தனர். அப்போது அங்கே ஒரு அதிசயம் நடந்தது. கோவிலுக்குள் கொள்ளையர்கள், கை, கால்கள் செயல் இழந்து மயங்கி விழுந்தனர். இந்த நிலையில் கோவில் நிர்வாகியின் கனவில் அய்யனார் தோன்றி கோவிலுக்குள் கொள்ளையர்கள் புகுந்து விட்டனர் என்று கூறினார். உடனே கோவில் நிர்வாகி வந்து பார்த்தார். கோவிலுக்குள் இளம்பெண் இருந்ததையும், கோவில் வளாகத்தில் கொள்ளையர்கள் மயங்கி கிடந்ததையும் கண்டு நிலைமையை புரிந்து கொண்டார். பின்னர் அய்யனார் கோவில் விபூதியை கொள்ளையர்கள் மீது பூசியதும் அவர்கள் சுய நினைவு வர பெற்று, செய்த தவறுக்கு வருந்தி அய்யனாரிடம் மன்னிப்பு கேட்டனர். இளம்பெண்ணை கொள்ளையர்களிடம் இருந்து காத்து, கொள்ளையர்களையும் சிறைவைத்து அவர்கள் வெளியே சென்றுவிடாமல் காவல் காத்ததால் அய்யனார் சிறை காத்த அய்யனார் என்றழைக்கப்பட்டார்.
முன்னொரு காலத்தில் விவசாயி ஒருவருக்கு, செய்யாத குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து மன்னர் தீர்ப்பு கூறினார். விவசாயியின் தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்றும் படி சிறை காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது. திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பதற்கேற்ப விவசாயி, அய்யனாரை உள்ளம் உருக வழிபட்டார். மேலும் இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். விவசாயிக்கு மரணதண்டணை நிறைவேற்றப்படும் நேரத்தில் ஒருவர், உண்மையான குற்றவாளியை மன்னர் முன் நிறுத்தி, விவசாயியை மரண தண்டனையில் இருந்து காப்பாற்றினார். மனித வடிவில் உண்மையான குற்றவாளியை மன்னர் முன்பு நிறுத்தியவர் சாட்சாத் அய்யனார் தான் என்று அவரது பெருமையை பக்தர்கள் இன்றும் கூறி பரவசப்பட்டு கொள்கின்றனர். நீதிமன்ற வழக்குகளில் வெற்றியை தேடி தரும் வல்லமை மிக்கவராக சிறைகாத்த அய்யனார் திகழ்கிறார். எனவே நீதிமன்ற வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வேண்டி பக்தர்கள் இங்கு வந்து அய்யனாருக்கு அர்ச்சனை செய்து வழிபட்டு செல்கின்றனர்.
கருப்பண்ணசாமி:
இங்குள்ள கருப்பண்ணசாமி திருமணத்தடை, புத்திரதோஷம் ஆகிய வற்றை போக்கும் ஆற்றல் படைத்தவர். இவரது சன்னிதியில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை துண்டு சீட்டில் எழுதி கட்டினால் 3 மாதத்திற்குள் அவை நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அம்பாளுக்கு 7, 9, 21 என்ற எண்ணிக்கையில் தீபம் ஏற்றினால் நினைத்த காரியங்கள் எளிதில் நிறைவேறும் என்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிறைகாத்த அய்யனாருக்கு அர்ச்சனை செய்தும், கருப்பண்ணசாமிக்கு பூஜை செய்தும், தேங்காய் உடைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
விநாயகர், ஸ்ரீவீரபத்திரசாமி, காமாட்சி அம்மன், பேச்சி அம்மன், சங்கிலி கருப்பண்ணசாமி, சப்த கன்னியர்கள், காட்டேரி அம்மன், ஞாலி சன்னாசி சித்தர், மாமுண்டீஸ்வரர், பெரியண்ணசாமி, காத்தவீரியன், மதுரைவீரன் ஆகிய தெய்வங்களுக்கு தனி சன்னிதிகள் உள்ளன. அய்யனார் உற்சவமூர்த்தி பூரணை, புஷ்பகலா ஆகிய 2 அம்பாள்களுடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பால்குட திருவிழா :
வருடத்தில் பங்குனி மாதம் 3-வது ஞாயிற்றுக்கிழமை பால்குட திருவிழா நடைபெறும். 18-ம் படி கருப்பண்ணசாமிக்கு ஞாயிற்றுக்கிழமை குழந்தைகளுக்கு காதுகுத்து விழாவினை பெற்றோர் எடுக்கின்றனர். அதேபோல இந்த கோவிலில் திருமணம் போன்ற சுபகாரியங்களும் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இரவு 8 மணி வரை கோவில் திறந்து இருக்கும்.
வழியும் – தூரமும் :
தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் பள்ளியக்ரஹாரம் என்ற பகுதி உள்ளது. அப்பகுதியில் உள்ள ரவுண்டானா அருகில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது. கும்பகோணம், திருவையாறு செல்லும் பஸ்சில் ஏறினால் பள்ளியக்ரஹாரம் ரவுண்டானாவில் இறங்கி 1 கிலோமீட்டர் தூரம் சென்றால் இந்த கோவிலை அடையலாம்.
நோய் தீர்க்கும் பச்சிலை:
அரியும், சிவனும் ஒன்று என்பதை நிரூபிக்கும் வகையில் சிறைகாத்த அய்யனார் கோவிலில் வில்வம் மற்றும் துளசியால் அர்ச்சனை செய்யப்படுகிறது. கோவில் வளாகத்தில் பச்சிலை மரம் உள்ளது. இந்த மரத்தில் உள்ள பச்சிலைக்கு, நோய் தீர்க்கும் சக்தி உள்ளது. இந்த மரத்தின் இலையை ஒன்று, இரண்டு தின்றால் நோய் குணமாகிறது என்கிறார்கள். இந்த இலையை பறித்து கோவிலில் வைத்து அர்ச்சனை செய்தும் எடுத்து செல்கிறார்கள்.
சப்த கன்னியர் :
ஒருமுறை தேவலோகத்தில் இருந்து சப்த கன்னியர்கள் பூலோகம் வந்து, காவிரி ஆற்றில் நீராடினர். அப்போது ஒரு வேடன் அவர்களை சிறைப்பிடித்தான். சப்த கன்னியர்கள் வேடனின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக அபயக் குரல் எழுப்பினர். உடனே அய்யனார் அங்கு வந்து வேடனிடம் இருந்து சப்தகன்னியர்களை மீட்டார். இதை நினைவுகூரும் விதமாக ஆலயத்தில் சப்த கன்னியர்களுடன் வேடனின் சிலையும் தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.