சசிகலா கோஷ்டியைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வராகப் போவதை மக்களால் ஜீரணிக்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் மக்கள் தங்களது கொதிப்பையும், கோபத்தையும் காட்ட ஆரம்பித்துள்ளனர்.
சசிகலா நேரடியாக முதல்வராக ஆசைப்பட்டபோது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். சசிகலா முதல்வரா என்று கொந்தளித்தனர். கொதித்தனர். ஆனால் ஓ.பி.எஸ். ரூபத்தில் அது தடுத்து நிறுத்தப்பட்டது. இனி ஓ.பி.எஸ் பக்கம் அதிமுக எம்.எல்.ஏக்கள் முழுமையாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சசிகலா கும்பல் தொடர்ந்து தனது கஸ்டடியிலேயே எம்.எல்.ஏக்களை வைத்திருந்தது. அவர்களை விடுவிக்க முன்வரவில்லை. இதனால் மக்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் சசிகலா கோஷ்டியால் எடப்பாடி பழனிச்சாமி சட்டசபை அதிமுக தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கொந்தளிப்பில் மக்கள்
இப்போது எடப்பாடியை ஆட்சியமைக்க பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர ராவ் அழைப்பு விடுத்துள்ளார். இது மக்களை பெரும் ஆத்திரத்துக்குள்ளாக்கியுள்ளது. காரணம், இந்த எடப்பாடி பழனிச்சாமியை கையாளப் போவது பெரா வழக்கில் சிக்கி வழக்கை எதிர்கொண்டிருக்கும் டிடிவி தினகரன் என்பதுதான்.
டிடிவி தினகரன்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வரின் பதவியேற்பு விழாவைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுகிறார். இதை தமிழக மக்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. எடப்பாடியை ஏற்றுக் கொண்டாலும் கூட குற்றவாளி சசிகலாவின் அக்காள் மகனும், பெரா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு வழக்கை எதிர்கொண்டுள்ளவருமான தினகரன், தமிழகத்தின் அடுத்த முதல்வர் பதவியேற்பு குறித்து அறிவித்துள்ளதுதான் மிகப் பெரிய அதிர்ச்சியாக உள்ளது.
குற்றவாளி சசிகலாவின் ஆசியுடன்
தமிழகத்தின் தலையெழுத்தை இப்படி ஒரு குற்றவாளி கும்பலிடம் ஒப்படைத்து விட்டனரே இந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் என்று மக்கள் பெரும் கொதிப்பில் உள்ளனர். சசிகலா கும்பலை ஆதரிக்கும் ஒவ்வொரு எம்.எல்.ஏ மீதும் மக்கள் கடும் ஆத்திரத்துடன் உள்ளனர். தேர்தல் சமயத்தில் வரட்டும், அப்போது பார்த்துக் கொள்கிறோம் என்று மக்கள் குமுறுவதை பார்க்க முடிகிறது.
தமிழகத்தின் எதிர்காலம்!
குற்றவாளி சசிகலாவின் ஆசி மற்றும் ஃபெரா தினகரனின் ஆதரவுடன் அமையப் போகும் இந்த ஆட்சியில் தமிழகத்தின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்பதை நினைத்தால் மிகப் பெரிய அயர்ச்சிதான் வருகிறது.