எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டிலேயே தொடர்ந்து சிறைவைக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமியை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்திருக்கிறார். இன்று மாலை 4 மணிக்கு முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் மாளிகையில் பதவியேற்கிறார்.
15 நாட்களில் பெரும்பான்மை
எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைத்துள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கவும் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள் தாவிவிடக் கூடாது என்பதற்காக கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
ரிசார்ட்டில் சித்ரவதை
கடந்த 9 நாட்களாக கூவத்தூர் ரிசார்ட்டில் சசிகலா கும்பல் குண்டர்களின் கட்டுப்பாட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரும் சித்திரவதையை அனுபவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போது எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்துள்ளதால் கூவத்தூர் ரிசார்ட் குதூகலத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் 15 நாட்களுக்குள் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
எப்போது விடுதலை
பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 2 வார காலம் எடுத்துக் கொள்வதா? அல்லது உடனே சட்டசபையை கூட்டி பெரும்பான்மயை நிரூபிப்பதா? என்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இன்னும் முடிவு செய்யவில்லை. இருப்பினும் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட் சிறையில் இருக்க நேரிடுமா? அல்லது உடனே விடுதலை விடுக்குமா? என்பது கேள்விக்குறியே.