இந்தியாவுக்கு வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.
தொடர்ந்து 4 டெஸ்ட் தொடர்களில் இரட்டை சதங்கள் அடித்து வரலாறு படைத்துள்ள இந்திய கேப்டன் விராட் கோலியே ஆஸ்திரேலிய பவுலர்களின் பிரதான குறியாக இருப்பார். ரன்குவிப்பில் மிரட்டி வரும் அவரை சீக்கிரம் வீழ்த்திவிட்டால் தங்களது கை ஓங்கிவிடும் என்று திட்டம் போட்டு அதற்கு ஏற்ப ஆஸ்திரேலிய பவுலர்கள் வியூகங்களை வகுத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கோலிக்கு, ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் கடும் குடைச்சல் கொடுப்பார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் மைக் ஹஸ்சி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஹஸ்சி நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்திய துணை கண்டத்தில் நிலவும் சூழலில், அற்புதமாக பந்து வீசக்கூடியவர், மிட்செல் ஸ்டார்க். பந்துவீச்சில் நல்ல வேகத்தை காட்டுவதுடன், புதிய பந்திலும் ஸ்விங் செய்ய கூடியவர். அத்துடன் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்வதிலும் கில்லாடி. இந்த தொடர் முழுவதும் அவர் விராட் கோலிக்கு பலத்த சவால் அளிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். எது எப்படியோ, சமீப காலமாக வியப்புக்குரிய வகையில் விளையாடி வரும் விராட் கோலியை கட்டுப்படுத்த எல்லா பவுலர்களும் ஒருமித்த முயற்சியை வெளிப்படுத்த வேண்டும்.
ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித்துக்கு இந்திய மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. இது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கும், அடுத்து வரும் ஐ.பி.எல். போட்டிக்கும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் மீது அவர் மிகுந்த நம்பிக்கை வைத்து, பொறுமை காப்பது அவசியம். தாக்குதல் ஆட்டத்திலும் சரி, தற்காப்பு ஆட்டத்திலும் சரி களத்தில் சரியான சமச்சீருடன் செயல்பட வேண்டும்
ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ரன்கள் குவிக்க வேண்டிய நெருக்கடி ஸ்டீவன் சுமித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு எப்போதும் இருக்கும். இருவரும் தொடர்ந்து ரன்வேட்டையாடும் தாகத்தில் இருப்பது நல்ல விஷயமாகும். அவர்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் மிகப்பெரிய சவாலாக இருப்பார்கள். ஆனால் இருவரும் இந்த தொடரில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினும், ரவீந்திர ஜடேஜாவும் இங்குள்ள சூழலில் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். குறிப்பாக அஸ்வின் இங்குள்ள நிலைமையை நன்கு புரிந்து வைத்திருப்பவர். அதை எப்படி சாதகமாக மாற்ற வேண்டும் என்பது அவருக்கு தெரியும். எனவே ஒவ்வொரு ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களும் சுழற்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது, களத்தில் எந்த வகையில் தங்களது திட்டத்தை செயல்படுத்துவது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த இந்திய சுற்றுப்பயணத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது மிகுந்த கவனம் செலுத்துகிறது. அதனால் தான் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக (துபாயில் பயிற்சி) தயாராகி உள்ளது. இனி களத்தில் அவர்கள் எத்தகைய திறமையை வெளிக்காட்டுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் நன்றாக தயாராகி இருந்தால் தான் களத்தில் சாதிக்க முடியும்.
இவ்வாறு மைக் ஹஸ்சி கூறினார்.