உடற்பயிற்சி என்பது உடல் நிலையையும், நலத்தையும் மேம்படுத்தும் உடல் செயற்பாடுகள் ஆகும். நடத்தல், ஓடுதல், நீந்துதல், பனிச் சறுக்கல், மிதிவண்டி ஓட்டுதல், விளையாடுதல், நடனம் ஆடுதல், யோகாசனம் செய்தல், உடலுழைப்பு என எல்லாம் உடற் பயிற்சிகளே. இதய நோய், சர்க்கரை நோய், உடற்பருமன் போன்ற குறைகளை உடற்பயிற்சியினால் கட்டுப்படுத்த இயலும்.
உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும். உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல்வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை (ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்).
இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும். தற்போது உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. என்ன தான் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் உடற்பயிற்சி இருந்தால் தான் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
உடற்பயிற்சி மூலம் வெளியாகும் வியர்வை உடற்கழிவுகளை வெளிப்படுத்துவதில் முக்கிய பங்குவகிக்கின்றது. உடற்பயிற்சி மூலம் இரத்த ஓட்டம் துரிதப்படுத்தப்படுவதால், உடலுக்குச் சக்தி அதிகரிக்கின்றது.
நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம். உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும்.
முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.