குறைவாக தண்ணீர் அருந்தினால் இப்படி ஒரு நோய் தொற்று ஏற்படும்!

நாள்தோறும் 2 லிட்டருக்கும் குறைவான தண்ணீரை குடிப்பவர்களுக்கு, சிறுநீர்த்தொற்றுநோய் ஏற்படலாம் என, ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, டெல்லியை சேர்ந்த மருத்துவர்கள் குழு ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதில், நாள்தோறும் சராசரியாக, 2 லிட்டர் நீர் அருந்த வேண்டும் என்றும், அப்போதுதான் சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சீராக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

குறைவாக நீர் அருந்துவதால், சிறுநீர்ப் பை, சிறுநீரகம் மற்றும் அதன் துவாரம் போன்ற இடங்களில் பாக்டீரியா தொற்று ஏற்படுகிறது. இந்த பாக்டீரியா படிப்படியாக நன்கு வளர்ந்து, இருமல், குளிர், சளி, காய்ச்சல் போன்றவற்றை நமக்குக் கொண்டுவருகிறது.

அதிலும் குறிப்பாக, ஏசி அறையில் அமர்ந்து பணிபுரிவோரிடையே இந்த சிக்கல் நிலவுகிறது. தாகம் ஏற்படாததால், பலர் நீர் அருந்தாமல் அப்படியே தொடர்ந்து பல மணிநேரம் பணிபுரிகின்றனர். இதையடுத்து, அவர்களது உடலில் நீர்ச்சத்துக் குறைபாடு நிகழ்கிறது.

இந்த நீர்ச்சத்துக் குறைபாட்டை தொடக்கத்திலேயே சரிசெய்யாவிட்டால், படிப்படியாக, உடல் இயக்கத்தையே நிறுத்தும் அளவுக்கு பிரச்னை ஏற்படும் என்றும் அந்த மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேபோன்று, குளிர்காலத்திலும் நமக்கு அதிக தாகம் எடுக்காமல் இருக்கும். அப்போதும், நாம் உடலின் நீர்ச்சத்தை சீராகப் பராமரிக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நீண்ட காலமாக, ஏசி அறையிலேயே வசிப்பவர் என்பதையும் இந்த ஆய்வில் ஒரு காரணியாக, மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.