இந்திய வெளிவிவகாரச் செயலாளர் எஸ்.ஜெய்சங்கர், நாளை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பரந்துபட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து இந்த நாட்டு அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்கே அவர் இலங்கைக்கு வருகைத்தரவுள்ளார்.
நாளை கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும் அவர், எதிர்வரும் 20ஆம் திகதி, வரை அங்கு தங்கியிருப்பார் என்று இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையுடன் நெருக்கமடைந்துள்ள உறவுகளை தொடரும் வகையில், இந்தப் பயணம் அமையும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
மின்சக்தி, நெடுஞ்சாலைகள், விமான நிலையம், ஹைட்ரோகாபன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், ஒத்துழைப்பு மற்றும் கூட்டுக்கான் வாய்ப்புகள் குறித்து இந்திய வெளிவிவகாரச் செயலர் இலங்கை தலைவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.
இரண்டு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் நடத்தப்பட்ட பல்வேறு கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, இந்தப் பயணத்தின் போது கலந்துரையாடப்படும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.