சோர்வு, அஜீரண பிரச்சனையை போக்கும் ஆரஞ்சுப்பழம்

நாம் உண்ணும் இந்த ஆரஞ்சுப் பழத்தை ‘கமலா பழம்’ என்றும் அழைப்பதுண்டு. இந்த வகை ஆரஞ்சுப்பழமானது எண்ணற்ற நன்மைகளை நமக்கு வாரி வழங்குகிறது. ஆரஞ்சுப்பழத்தில் ஏ, பி, சி ஆகிய சத்துகள் மிக அதிக அளவில் கலந்துள்ளன. சுண்ணாம்புச் சத்தும், இரும்புச் சத்தும் கூட அதிக அளவு காணப்படுகின்றன.

நோய்ப் படுக்கையில் இருக்கும்போது நோயாளிகளுக்கு எந்தவித உணவும் ருசிக்காது. அதனால் அவர்கள் உணவையே தள்ளிவிட முயற்சிப்பார்கள். உணவே இல்லாத நிலையில், உடல் மேலும் சோர்வடையும். இந்தக் குறைப்பாட்டைத் தவிர்க்க நோயாளிகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கச் சொல்வார்கள். நோயாளிகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறு நன்கு ருசிக்கும்.

தாய்ப்பால் பற்றாக்குறையால் தவிக்கும் குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழச்சாறு அருமையான உணவாகப் பயன்படுகிறது. ஆனால், கைக்குழந்தைகளாக இருந்தால் ஆரஞ்சுப் பழச்சாற்றுடன் சரிபாதி அளவு தண்ணீர் கலந்து கொடுக்க வேண்டும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தனித்த சாறாகவே கொடுத்து விடலாம் அல்லது பழத்தை உரித்துக் கொடுத்து உண்ணச் சொல்லலாம்.

அஜீரணக் குறைபாடுகளைச் சரிசெய்யும் ஆற்றல் இந்த ஆரஞ்சுப் பழச்சாறுக்கு உண்டு. அஜீரணக் கோளாறு காரணமாக பேதியாகும்போது ஆரஞ்சுப் பழச்சாற்றைக் கொடுத்தால் உடன் பேதி நின்று நல்ல குணம் கிடைக்கும். இரவில் தூக்கம் வராமல் தவிப்போர் தூங்கச் செல்லும்முன் நூறு மி.லி. ஆரஞ்சுப் பழச்சாறுடன் இரண்டு தேக்கரண்டி அளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் நல்ல தூக்கம் பெறலாம்.

ஆரஞ்சுப் பழச்சாறு பற்களை வலிமைப்படுத்தக் கூடியது. மேலும் பற்கள் தொடர்பான அனைத்துக் குறைபாடுகளையும் அகற்றும் தன்மை இதற்கு உண்டு.

இத்தகைய நற்பண்புகளைக் கொண்டுள்ள இந்த ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் ‘ஏ’ உயிர்ச்சத்து 99 மில்லிகிராம் அமைந்திருக்கிறது. மேலும் வைட்டமின் பி-1 34 மில்லி கிராமும், பி-2, 17 மில்லி கிராமும், சி-19 மில்லி கிராம் என்ற அளவில் அமைந்துள்ளன. அதில் காணப்படும் சுண்ணாம்புச் சத்தின் அளவு 14 மில்லிகிராம் ஆகும்.