சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து புதன் கிழமை மாலை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவும், அவரது அண்ணியார் இளவரசியும், பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இரவு அவர்களுக்கு சப்பாத்தி, களி, சாம்பார் கொடுக்கப்பட்டது. இது சிறையில் எல்லோருக்கும் வழங்கப்படும் சாப்பாடுதான். மற்றபடி இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை. சிறையில் அணியக்கூடிய வெள்ளை நிறத்தில் நீல நிற பார்டர் போட்ட சேலை அவர்களுக்கு வழங்கப்பட்டது.
தூங்காமல் தவித்த சசிகலா
சப்பாத்தி, சாம்பாரை சசிகலா வேண்டாம் என்று நிராகரித்துவிட்டதாக கூறப்படுகிறது. பழங்களை மட்டும் அவர் சாப்பிட்டார். இரவு முழுவதும் அவர் சரியாக தூங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இளவரசியுடன் பேச்சு
நள்ளிரவு வரை சசிகலா மற்றும் இளவரசி பேசிக்கொண்டிருந்தார்களாம். காலை 5.30 மணிக்கு எழுந்த சசிகலா சில நிமிடங்கள் தியானம் செய்துள்ளார். காலை காபி குடித்தார். பிறகு பத்திரிகைகள் வேண்டும் என்று சிறை ஊழியர்களிடம் கேட்டார். அவருக்கு தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளை ஊழியர்கள் வாங்கி வந்து கொடுத்தனராம்.
புளியோதரை, ராகி களி
சாதாரண கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகளே சசிகலா உள்பட 3 பேருக்கும் வழங்கப்பட்டது. காலையில் பிஸ்கட், இனிப்பு அல்லாத டீ வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து காலையில் புளிச்சாதமும், 11 மணிக்கு சாண்ட்விச் கொடுக்கப்பட்டது. மாலை 4 மணிக்கு பிஸ்கட் மற்றும் டீ போன்றவை வழங்கப்பட்டுள்ளது. முதலில் வேண்டாம் என்று சசிகலா மறுத்துள்ளார். இளவரசி வற்புறுத்தவே பின்னர் வாங்கி சாப்பிட்டாராம்.
போலீஸ் பாதுகாப்பு
சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையின் முன்பு நேற்று சுமார் 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அதிமுகவினர் சிலர் அங்கு வந்து சிறையின் முன்பு சிறிது நேரம் இருந்துவிட்டு சென்றனர். வக்கீல்கள் சிலரும் நேற்று வந்து பேசினார்களாம்.
அமைதியாக இருந்த சசிகலா
முதல்நாள் இரவு தூங்காத காரணத்தால் சசிகலா சோர்வாகவே காணப்பட்டுள்ளார் என்று சிறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.யாருடனும் அதிகமாக அவர் பேசவில்லை என்றும் சிறை ஊழியர்கள் தெரிவித்தனர். சிறிது நேரம் நடந்த அவர், அதிக நேரம் இளவரசியுடனே கழித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.