சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலாவும், இளவரசியும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
புதன்கிழமையன்று அவர் நீண்ட தூரம் பயணம் செய்து பெங்கரூரு நீதிமன்றத்தில் சரணமடைந்தார். பரப்பன அக்ரஹாரா சிறையில் அவர் ஒரு சிறிய அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 10 அடி அகலம், 12 அடி நீளம் கொண்டதாக அந்த அறை இருந்தது. அந்த அறையில் கழிவறை உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை. எனவே சசிகலா வேறு அறை கேட்டுள்ளார்.
கடந்த 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா சிறையில் இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையை ஒதுக்குமாறு சசிகலா கேட்டதாகவும், அந்த கோரிக்கையை சிறைத்துறை அதிகாரிகள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
சிறையில் சசிகலா
சசிகலா, இளவரசிக்கு முதலில் சிறையின் நுழைவு வாயில் அருகில் மகளிர் கைதிகள் அடைக்கப்படும் பகுதியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
இந்த அறைக்கு பக்கத்து அறையில் சயனைடு மல்லிகா என்ற பயங்கரமான பெண் கைதி அடைக்கப்பட்டுள்ளார். சயனைடு கலந்து பெண்களை கொலை செய்திருக்கிறார். அதனால்தான் பெயருடன் அடைமொழியாக சயனைடு சேர்ந்துள்ளது. கர்நாடகாவில் இவர் மீது பல கொலை வழக்குகள் உள்ளன.
அருகிலேயே கொலைகாரி
கடந்த முறை சசிகலா, ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்ட போதும் மல்லிகா சிறையில்தான் இருந்தார். அப்போது ஜெயலலிதாவைச் சந்திக்க சயனைடு மல்லிகா ஆசைப்பட்டார். ஆனால், சிறைத்துறை அதிகாரிகள் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டனர். இந்த முறை சசிகலா அறைக்கு அருகே உள்ள அறையில் சயனைடு மல்லிகா அடைக்கப்பட்டு உள்ளார்.
வேறு அறைக்கு மாற்றம்
தங்களை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சசிகலா, இளவரசிக்கு வேறு பாதுகாப்பான பகுதியில் ஒரு அறை ஒதுக்கப்பட்டது.
சசிகலாவுக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து கொடுக்கவும், அவசர தேவைகளுக்கு உதவி செய்யவும் சிறை பெண் ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வருமான வரி ஆவணங்கள்
சசிகலாவுக்கு சிறையில் முதல் வகுப்பு அறை வழங்கக்கோரி அவர் வருமான வரி செலுத்திய ஆவணங்கள் சிறை அதிகாரிகளிடம் நேற்று வழக்கறிஞர்கள் ஒப்படைத்தனர். அந்த ஆவணங்களை பரிசீலிக்கப்பட்டு விரைவில் சசிகலாவுக்கு முதல் வகுப்பு அறை வழங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
முதல்வகுப்பு சிறை
முதல் வகுப்பு அறையில் ஒரு மின்விசிறி, படுக்கை, தனிக்கழிவறை வசதி இருக்கும். தினமும் 2 செய்தித்தாள்கள் வழங்கப்படும். வாரந்தோறும் இரு முறை அசைவ உணவு வழங்கப்படும். காலை உணவாக சப்பாத்திக்கு அரை லிட்டர் சாம்பார், கால் லிட்டர் தயிர் கிடைக்கும். மதிய உணவாக சாதம், சப்பாத்தி , ராகி இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இரவு உணவாக சப்பாத்தி வழங்கப்படும்.
சசிகலா தாக்கப்படலாம்
இந்த சூழ்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலுள்ள தமிழ் பெண் கைதிகள் சிலர் சசிகலாவை தாக்கலாம் என அச்சம் நிலவுகிறது. அப்படி தாக்குதல் நடைபெறும் பட்சத்தில் பெங்களூரில் தனக்கு பாதுகாப்பு இல்லை என கூறிவிட்டு, தமிழக சிறைக்கு தன்னை மாற்றுமாறு சசிகலா தரப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.