பழனி கோவிலுக்கு மாறுவேடத்தில் சென்ற விஜய்

நடிகர் விஜய் தற்போது அதிகமாக பொது இடங்களில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரி இளைஞர்கள், மாணவர்கள் நடத்திய மிகப்பெரிய போராட்டத்தின்போது, மெரீனாவில் முகத்தில் துணியை கட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் வந்து கலந்துவிட்டு சென்றார்.

இந்நிலையில், தற்போது பழனி கோவிலுக்கு முகத்தில் துணியை கட்டியவாறு சென்று தரிசனம் செய்து வந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அந்த புகைப்படத்தில் விஜய் காவி வேஷ்டி அணிந்துள்ளார். காவி துண்டால் தனது முகத்தை மூடியாவாறு கட்டியுள்ளார். விஜய் தற்போது அட்லி இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இது அந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சி என்பதை படக்குழுவினர் மறுத்துள்ளனர்.

இப்படத்தில் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், சத்யன், வடிவேலு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.