எடப்பாடிக்கு எதிராக வாக்களியுங்கள்…காங். எம்எல்ஏக்களுக்கு ராகுல் அதிரடி உத்தரவு!

தமிழக சட்டசபையில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி நாளை சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளார். இதற்காக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

இதில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்க போவதாக திமுக அறிவித்துள்ளது. ஆனால் திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக அவர் பேசுவதுப் போல் இருந்ததால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்குமாறு காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மூலம் ராகுல் காந்தி இதனை தெரிவித்துள்ளார்.