பதவி ஏற்ற ஒரு மாதத்தில் அதிபர் டிரம்புக்கு கடைசி இடம் கருத்து: வாக்கெடுப்பில் தகவல்

அமெரிக்காவில் புதிய அதிபர் பதவி ஏற்றவுடன் அவரது செயல்பாடுகள் குறித்தும் அவருக்கு மக்களி டம் உள்ள செல்வாக்கு பற்றியும் கருத்து வாக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி புதிதாக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப் குறித்து சி.என்.என். மற்றும் ஓ.ஆர்.சி. இணைந்து கருத்து வாக்கெடுப்பு நடத்தியது.

அதில் 53 சதவீதம் பேர் டிரம்பின் செயல்பாடுகள் வரவேற்கதக்கதாக இல்லை என்று தெரிவித்துள்ளனர். 44 சதவீதம் பேர் மட்டுமே செயல்பாடுகள் சரியாக உள்ளது என கூறியுள்ளனர்.

அதன் மூலம் அமெரிக்காவில் பதவி வகித்த அதிபர்களில் இவர் மக்கள் செல்வாக்கில் கடைசி இடம் பெற்றுள்ளார்.

அதே நேரத்தில் முந்தைய அதிபர்களை ஒப்பிடும் போது பராக் ஒபாமா மக்கள் செல்வாக்கில் முதலிடம் பெற்றுள்ளார். அவருக்கு 76 சதவீதம் ஆதரவு கிடைத்துள்ளது. அவருக்கு அடுத்தபடியாக ஜான் எப் கென்னடிக்கு 72 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ட்வைட் ஐசனோவருக்கு 68 சதவீதமும், ஜிம்மி கார்டருக்கு 66 சதவீதமும், ரிச்சர்ட் நிக்சன், பில்கிளிண்டனுக்கு தலா 59 சதவீதமும், ஜார்ஜ் டபிள்யூ புஷ்சுக்கு 58 சதவீதமும் சீனியர் புஷ்சுக்கு 57 சதவீதமும், ரொனால்டு ரீகனுக்கு 51 சதவீதம் பேரும் ஆதரவாக கருத்து கூறியுள்ளனர்.

சிரியா அகதிகளுக்கு தடை, 7 முஸ்லிம் நாடுகளுக்கு விசா தடை, மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டம். அதாவது குடியுரிமை மற்றும் வெளியுறவு கொள்கையில் டிரம்பின் முடிவுகள் அமெரிக்க மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.