எடப்பாடி வென்றதை.. சிறை டிவியில் பார்த்து ரசித்த சசிகலா.. போனிலும் வாழ்த்து!

தமிழக சட்டசபையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதனை பரப்பன அக்ராஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா டிவியில் பார்த்து ரசித்தாராம்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்கள் ஆதரவு பெற்று வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு தொலைபேசி மூலம் சசிகலா வாழ்த்து கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிறையில் சசிகலா
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று உள்ள சசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையில்அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறையில் சாதாரண அறையே ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு தொலைக்காட்சி வசதி இல்லை.

டிவி பார்த்த சசிகலா
சனிக்கிழமையன்று டிவி பார்க்க அனுமதிக்க வேண்டும் என்று வியாழக்கிழமை இரவே சிறை அதிகாரிகளிடம் சசிகலாவும் இளவரசியும் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சசிகலா, இளவரசி ஆகியோருக்கு வேறொரு அறையில் டிவி பார்க்க அனுமதி வழங்கப்பட்டது.

சசிகலா வாழ்த்து

சட்டசபை நிகழ்ச்சிகளை டிவியில் பார்த்த சசிகலா மகிழ்ச்சியடைந்தாராம். இதனையடுத்து அவரை காண வந்த வழக்கறிஞர்களை சந்தித்த சசிகலா, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடமும், அமைச்சர்களிடம் தொலைபேசி மூலம் பேசி வாழ்த்து கூறினாராம். நேற்றிரவு 7 மணி வரை சில ஆலோசனைகளையும் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்வகுப்பு அறை
சசிகலாவிற்கு முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வயதாகி விட்டதாலும் நோய் பாதிப்பு உள்ளதாலும் முதல் வகுப்பு அறை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். முதல் வகுப்பு அறையில் டிவி, கட்டில் , ஒரு மின் விசிறி எல்லாம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரிமோட் கண்ட்ரோல் அரசு
தமிழக அரசை சிறையில் இருந்து சசிகலா இயக்குவார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதிர்கட்சியினர் பினாமி அரசு என்றும் குற்றம் சாட்டி வருகின்றனர். அது உண்மைதான் என்று கூறும் வகையில் நேற்றே சசிகலா தொலைபேசி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்களுக்கு தொலைபேசி மூலம் ஆலோசனை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.