முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் அடுத்தடுத்து வழக்குகள் பாய உள்ளது என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளரான சசிகலா முதல்வராக முயற்சித்தார். அதிமுக சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓபிஎஸ் ராஜினாமா செய்தார்.
பின் அதிமுக இரண்டாக உடைந்து ஓபிஎஸ் அணி சசிகலா அணி என ஆனது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த சசிகலா தனது ஆதரவு அமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை சட்டசபைக் குழு தலைவராக அறிவித்தார்.
சசிகலாவுக்கு வந்த எதிர்ப்புகள்
ஆனால் சசிகலா தரப்பைச் சேர்ந்தவர்கள் முதல்வராவதற்கு ஓபிஎஸ் அணி எதிர்ப்பு தெரிவித்தது. சசிகலா அணிக்கு மக்களிடையேயும் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
சசிக்கு எதிரான ஓபிஎஸ் அணி
சசிகலா தரப்பின் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்பதை தடுக்கும் வகையிலும் கட்சியை கைப்பற்றும் வகையிலும் ஓபிஎஸ் அணி செயல்பட்டு வந்தது. ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சில எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு மாறினர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சசிகலா தரப்பு எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து காய் நகர்த்தியது. இதனை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மையை நிரூபித்துள்ளது.
ஓபிஎஸ்க்கு நெருக்கடி
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ்க்கு நெருக்கடி கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாம். அதற்கான பணிகளில் இறங்க அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அதிகாரிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஓபிஎஸ் மீதும் அவரது ஆதரவாளர்கள் மீதும் விரைவில் வழக்குகள் பாயக் கூடுமாம்.