இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக திகழ்ந்தவர் ஸ்ரீசாந்த்.
2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இவர் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரரான அவர் உள்பட மேலும் 2 வீரர்களையும் டெல்லி போலீசார் ஸ்பாட் பிக்சிங் சூதாட்ட வழக்கில் கைது செய்து இருந்தனர்.
ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்ட ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) ஆயுள்கால தடை விதித்தது.
தற்போதைய நிதி மந்திரியாக இருக்கும் அருண்ஜெட்லி தலைமையிலான ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.
ஆயுள்கால தடை விதிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் உள்ளிட்டோரை டெல்லி கோர்ட்டு 2015-ம் ஆண்டு சூதாட்ட வழக்கில் இருந்து விடுவித்தது.
இந்த நிலையில் தன் மீதான ஆயுள்கால தடையை நீக்க கோரி கிரிக்கெட் வாரியத்தின் புதிய நிர்வாகிகளுக்கு ஸ்ரீசாந்த் கடிதம் எழுதியுள்ளார்.
லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்த கால தாமதம் செய்ததால் கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாக்கூர், செயலாளர் ஷிர்கே ஆகியோரை பொறுப்பில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. இதற்கு பதிலாக கிரிக்கெட் வாரியத்தை நிர்வகிக்க முன்னாள் கணக்கு தணிக்கையாளர் வினாத்ராய் தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்து இருந்தது.
வினோத்ராய்க்குத் தான் தற்போது ஸ்ரீசாந்த் ஆயுள் கால தடையை நீக்க கோரி கடிதம் எழுதியுள்ளார்.
ஸ்ரீசாந்த் சமீபத்தில் ஸ்காட்லாந்து ‘லீக்’ போட்டியில் விளையாட அனுமதிக்கக்கோரி தடையில்லா சான்றிதழ் கேட்டு இருந்தார். பழைய நிர்வாகிகள் தடையில்லா சான்றிதழ் அளிக்க மறுத்தனர்.
இதனால் மிகவும் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீசாந்த் தற்போது புதிய நிர்வாகிகளுக்கு தடையை நீக்கி போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.