இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய ஸ்பான்சராக ‘ஸ்டார் இந்தியா’ இருந்து வருகிறது. ஸ்டார் இந்தியாவின் ஸ்பான்சர் ஒப்பந்த காலம் வரும் மார்ச் மாதம் 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அடுத்த ஐந்து வருடத்திற்கான ஸ்பான்சர் ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1-ந்தேதியில் இருந்து 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை இந்தியா 259 போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் ஐ.சி.சி. நடத்தும் 21 போட்டிகளும், 238 இருநாடுகளுக்கிடையிலான தொடரிலும் இந்தியா விளையாடுகிறது.
இந்த காலகட்டத்துக்கான ஸ்பான்சர் ஒப்பந்த விண்ணப்பத்தை பி.சி.சி.ஐ. தனது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் யார் அதிகத் தொகையை பூர்த்தி செய்து வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் ஸ்பான்சராக தேர்வு செய்யப்பட்டுவார்கள். குறைந்தது 538 கோடி ரூபாய் அளவில் ஸ்பான்சர் ஒப்பந்தம் கோரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.