ஐ.நா மனித உரிமைகள் பேரவையில்2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை எந்த மாற்றங்களையும் செய்வதற்கு அனுமதிக்கக் கூடாது என கோரப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் இவ்வாறு கோரியுள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்த நிலையில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவாவுக்குச் சென்றுள்ளார்.
இவர் நேற்றுமுன்தினம் காலை, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியக அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது. 2015ஆம் ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கியமான விடயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக விபரித்துக் கூறினார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்துவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமைக்கத் திட்டமிடுவதன் மூலம், போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைக்கு வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்கும் வாக்குறுதியில் இருந்து பின்வாங்க இலங்கை முனைகிறது.
2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஐ.நா தீர்மானத்தில் இணங்கியிருந்தபடி, காணாமற்போனோருக்கான பணியகம் இன்னமும் உருவாக்கப்படவில்லை.
மேலும் ஜெனிவாவில் அளித்த வாக்குறுதிக்கு அமைய, அரசியல் கைதிகள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை, காணிகள் விடுவிப்பு இடம்பெறவில்லை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை” என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு மேலும் காலஅவகாசம் அளிப்பதில்லை என்று உறுதியான நிலைப்பாட்டை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், கூட்டத்தொடரின் தொடக்க உரையிலேயே உறுதியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியக அதிகாரிகளிடம் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளமை தொடர்பாக, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அதிகாரிகளுக்கும், சுமந்திரன் ஜெனிவாவில் விளக்கிக் கூறியுள்ளார்.