கிம்ஜாங் அன் அண்ணன் கொலையில் ‘திடீர்’ திருப்பம்: வடகொரியாவை சேர்ந்தவர் கைது

சீனாவில் வசித்து வந்த வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் அண்ணன் கிம் ஜாங் நாம் (வயது 46), கோலாலம்பூர் விமான நிலையத்தில், கடந்த 13-ந் தேதி மர்மமான முறையில் 2 பெண்களால் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலையின் பின்னணியில் வடகொரியாவின் தொடர்பு இருக்கக்கூடும் என தென்கொரியா சந்தேகிக்கிறது.

இந்த கொலையில் இந்தோனேசிய பெண் சிட்டி ஆயிஷா, அவரது மலேசிய காதலர், வியட்நாம் பெண் டொன் தி ஹூவாங் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வடகொரியாவை சேர்ந்த ஒருவரை மலேசிய போலீசார் கைது செய்துள்ளனர். இது இந்த வழக்கில் ‘திடீர்’ திருப்பமாக கருதப்படுகிறது.

கைது செய்யப்பட்டுள்ள வடகொரியா பிரஜையின் பெயர் ரி ஜாங் சோல் (46). அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். அவரிடம் நடத்தப்படுகிற விசாரணையின் முடிவில், இந்தக்கொலையில் உண்மையிலேயே வடகொரியாவுக்கு தொடர்பு இருந்ததா? என்பது தெரிய வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட கிம் ஜாங் நாமின் உடல் 2-வது முறையாக பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஆனாலும் இதிலும், அவரது படுகொலையின் பின்னணி குறித்து உறுதியான முடிவுக்கு வர முடியாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கிம் ஜாங் நாம் படுகொலையில் மர்ம முடிச்சுகள் அவிழாமல் தொடர்கின்றன.