முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். எனவே முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டுள்ளதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன் என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து பொன்னேரியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான் கூறியதாவது: சட்டசபையயில் ஜனநாயக முறைப்படி வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என குற்றம்சாட்டினார்.
மேலும் சட்டசபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் பதவியேற்ற பிறகும் அடைத்து வைத்துள்ளனர். இதிலிருந்து வெளியே ஓடிவிடுவார்கள், மாயமாகி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது. உடனடியாக ஜனநாயக முறையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
ஆனால் இந்த அரசு மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள் தேர்வு செய்த அரசாக உள்ளது. முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். ஆகவே இதை ஜனநாயக படுகொலையாக கருதுகிறேன் என்றார்.