ஐ.பி.எல் தொடரில் புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்தர சிங் தோனி அதிரடியாக நீக்கப்பட்டார். இருப்பினும் வருகின்ற தொடரில் கீப்பராகவும், பேட்ஸ்மேனாகவும் அவர் விளையாடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோனிக்கு பதிலாக ஆஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித் வருகின்ற ஐ.பி.எல். தொடரில் புனே அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்து சில வாரங்களே ஆன நிலையில், தற்போது ஐ.பி.எல் தொடரில் புனே அணி கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், புனே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நீக்கம் செய்யப்பட்டது ஏன் என்று அந்த அணியின் உரிமையாளர் சஞ்சிவ் கோயின்கா விளக்கம் அளித்துள்ளார்.
சஞ்சிவ் கோயின்கா கூறியதாவது:-
தோனி நீக்கம் செய்யப்படவில்லை. வருகின்ற தொடருக்கு ஸ்டீவ் சுமித்தை கேப்டனாக நாங்கள் நியமித்துள்ளோம். வெளிப்படையாக சொல்வதென்றால், கடந்த தொடரில் சிறப்பாக செயல்படவில்லை. அதனால் வருகின்ற 10-வது ஐ.பி.எல். தொடருக்கு புதிய இளம் வீரரை கேப்டனாக தேர்வு செய்ய விரும்பினோம்.
ஒரு தனி நபராகவும், அணித் தலைவராகவும் தோனி மீது அதிக மதிப்பு வைத்துள்ளேன். தோனி தொடர்ந்து அணி வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவார்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
கடந்த ஐ.பி.எல் தொடரில் தோனி தலைமையிலான அணி 14 போட்டிகளில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.